எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வருவதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என செப்பூத்தே எம்பி தெரெசா கோக் கூறுகிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அது நிகழ வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது தெரியாததால் பல வணிகர்கள் இந்த நாட்டில் முதலீடு செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.”
“நாங்கள் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் காத்துக் கொண்டிருக்கிறோம். மே அல்லது ஜுனில் நிகழும் என்றும் அடுத்து செப்டம்பரில் நிகழும் என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டன. பின்னர் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது,” என கோக் தமது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே நிலைமை இப்போது மோசமாக இருக்கிறது என்றார் அவர்.
தேர்தல் தேதிகளை நாடு நிர்ணயிக்க வேண்டுமே தவிர பிரதமருடைய விருப்பத்திற்கு ஏற்ப இருக்கக் கூடாது என டிஏபி உதவித் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோக் வருத்தத்துடன் சொன்னார்.
மலேசியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிலாங்கூர் புதிய தொழில் திட்டங்கள் எண்ணிக்கையிலும் முதலீட்டு அளவிலும் முதலிடம் வகிப்பது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
2012ம் ஆண்டு தமக்கு என்றும் நினைவில் இருக்கக் கூடிய ஆண்டு என்றும் அவர் வருணித்தார்.