மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டை வரவேற்போம்!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், டிசம்பர் 31, 2012.

அன்புடன் அனைவருக்கும் வணக்கம். என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நமது நாட்டின் 55 ஆண்டு கால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டை வரவேற்கின்றனர். மாற்றம் நாட்டில் நிகழுமா? 13 ஆவது பொதுத் தேர்தல் புத்ராஜெயாவில் மாற்றத்தைக் கொண்டு வருமா?  அவற்றை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
 
அரசியல் தலைவர்களின்  உரைகளையும், செயல்களையும் மக்கள் கவனித்து வருகின்றனர். குறிப்பாகxavier  அம்னோ தலைவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் மக்களை  அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பாரிசானின்  முதுகெலும்பான  அம்னோ  நாடு திவாலாகி விடும், மே 13 கலவரம் மீண்டும் வெடிக்கும், அம்னோ தோல்வியால் சொந்த மண்ணில் மலாய்க்காரர்கள் அன்னியர்களாக வாழ நேரிடும், இஸ்லாம் அதன் மாட்சிமையை இழக்க நேரிடும் என்றெல்லாம் உணர்வுகளைத் தூண்டி அறிக்கைகளை விட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் அவர்களின் ஓலங்களை நம்புவதாக இல்லை.
 
அது எப்படி முடியும்? நாட்டின் மக்கள் தொகையில் 2.8 கோடி மக்கள் மலாய்க்காரர்களாக, முஸ்லிமாக இருக்கும் வேளையில், நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பெரும்பாலான மக்களின் விருப்பங்களை  சிறும்பான்மையினர் எப்படிப் பறித்துக் கொள்ள முடியும்?

பக்காத்தானின் பாஸ்,  கெஅடிலான் மற்றுமின்றி  சபா. சராவா மாநிலங்களிலும் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் முஸ்லீம் பூமிபுத்ராக்களே. அதற்கு அப்பால், அம்னோவிலும் அதிகமான பூமிபுத்ராக்கள் வேட்பாளர்களாக இருக்கும் போது மலாய்க்காரர்களின்  ஆட்சி உரிமைகள் எப்படிப் பறிபோகும்? அம்னோவில் எத்தனை தலைவர்கள் மாறினாலும், அதன் பிரித்தாலும் கொள்கைகள் மாறாது. இன ரீதியான பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களால் பல்லின மலேசியாவின் உருவாக்கத்திற்கு நிச்சயம் பணியாற்ற முடியாது என்பது மட்டும் தெளிவு.

அதே வேளையில்,  பக்காத்தான் தலைவர்கள்  மாற்றத்தினால் மக்களுக்குக் கிட்டும் அனுகூலங்களை விவரித்து வருகின்றனர்.  எல்லோருக்கும்  இலவச உயர் கல்வி,  பிடிபிடிஎன்  கல்விக்கடன்  நீக்கம், மலிவான வாகனங்கள், வாங்கும் சக்திக்கேற்ற வீடுகள், மலிவான எரிபொருள், தாய்மொழி கல்வி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆகியவை அடங்கிய ஒற்றுமையான, முன்னேற்றகரமான, சுபிட்சமான மலேசியாவை உருவாக்க வேண்டும்.  அதற்கு முக்கியத் தேவை நேர்மை, தூய்மை, வெளிப்படையான நிர்வாகம், திறமையான  ஆட்சி முறையாகும். கடந்த தேர்தலில் மக்கள் செய்த சிறு மாற்றத்தினால் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதனால் முதல் முறையாகப் சில மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்தாலும்  மக்கள் கூட்டணியின் நேர்மையான ஆட்சிமுறை மக்களைக் கவர்ந்துள்ளது. மாநிலத்தின் வளம் மக்களுக்கே என்ற ‘’மைஸ்’’ திட்டத்தின் வழி சிலாங்கூரில் 60 கோடி ரிங்கிட்டுக்கு மேல் மக்கள்  நலன் திட்டங்களுக்குப் பயன் படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு முதல்  20 கன மீட்டர் தண்ணீரை சிலாங்கூர் மக்கள் இலவசமாகப் பெற்று வருகின்றனர். இருந்தும், 2008 ஆம் ஆண்டு மாநிலத்தின் நிதி கையிருப்பு 40 கோடி ரிங்கிட்டாக இருந்ததை  நான்கே ஆண்டுகளில் 230 கோடி ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது.

இந்தச் சாதனைகள், பக்காத்தான்  ஆட்சியில் நாடு திவாலாகிவிடும் என்ற  பாரிசானின் வாதத்தை அடிப்படையற்றதாக்கி விட்டது.  பக்காத்தான்  ஆட்சியில் மாநிலத்தின் வளம் பெருகி, மக்களுக்கு அதிக நன்மையும் கிட்டியுள்ளதைப் பல்வேறு திட்டங்கள் காட்டுகின்றன.  

பாரிசான் அரசாங்கம் அதன் தேர்தல் தோல்வியால் 2008ம் ஆண்டு மக்களுக்கு  அளித்த வாக்குறுதிகளைப் புறந்தள்ளி மக்களை வஞ்சித்து  வருகிறது.  அது வாக்களித்த மூன்றாவது கிள்ளான் பாலத்திட்டம், வெள்ளத் தடுப்பு திட்டம், சாலை மறுசீரமைப்பு, போன்று பல திட்டங்களை நிறுத்திவிட்டது. இருப்பினும் அவைகளை நிறைவேற்ற மாநில அரசே பெரும் நிதி ஒதுக்கியுள்ளது. இந்நாட்டின் மக்களிடம்  இருந்து பெரும்  வரியில்  24 விழுக்காட்டை  அதாவது 1,500 கோடி ரிங்கிட்டை வழங்கும் சிலாங்கூர் மாநில மக்களுக்கே வஞ்சனையா? மக்களின்  தேவைகளைச் சுய அரசியல் காரணங்களுக்காக  ஒதுக்கித்தள்ளி வருபவர்கள் எப்படி மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்? 

மக்களின்  உரிமைகளைத் தற்காக்க, அவர்களின் வாழ்க்கை  மேம்பாடடைய  பக்காத்தான் தொடர்ந்து பாடுபடும். எனது சட்டமன்றத் தொகுதியான ஸ்ரீ அண்டாலாஸ் மக்கள் கடுமையான வெள்ள நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கடந்தகால வடிகால், வீடமைப்பு திட்டமிடல் அமலாக்க முறைகேடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்குக் காரணங்கள் கூறிக்கொண்டு பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வுக்கான பல்வேறு திட்டங்களை அமுலாக்கி வருகிறோம்.  அதே வேளையில், மக்கள் ஆரோக்கியமான வாழ்வினைப் பெற, பல சுகாதார, கலாச்சார மற்றும் விளையாட்டு மைதான மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டும் வருகிறோம்.  

இன்று மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றரசுக் கட்சிகளின் ஆட்சிமுறை, குறுகிய காலத்திலேயே மக்களுக்குச் சிறந்த பயனைத் தந்துள்ளது. அதனை மேலும் மேம்படுத்தி நாட்டின் வளம் மக்களுக்குச் சென்றடைவதைக் காணப் பக்காத்தான்  அவா கொண்டுள்ளது. இன்றைய அம்னோ எஜமானர் ஆட்சிமுறையை நீக்கி, மக்களை நாட்டுக்கு எஜமானர்களாக்கும் பக்காத்தான் முறைக்கு ஆதரவளிக்கும் அறிவாற்றல்  கொண்டவர்களாக இன்று மக்கள் இருக்கின்றனர்.  ஒரே கட்சியின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக  திட்டங்கள் தீட்டப்படக் கூடாது, அடுத்த தலைமுறையின் சுகமான வாழ்வுக்குத் திட்டமிடும் பரந்த மனமுடைய அரசுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.  அடுத்த ஆண்டு நாம் ஏற்படுத்தும் மாற்றம் அடுத்த தலைமுறையினர் தலைநிமிர்ந்து நிற்க நாம் செய்யும் மாற்றமாக இருக்க வேண்டும்.

TAGS: