பிகேஆர்: 49,000 நாடற்ற பிள்ளைகள் இன்று பள்ளிக் கூடம் போகவில்லை

statelessதீபகற்ப மலேசியாவில் இன்று முதன் முறையாக ஆயிரக்கணக்கான பிள்ளைகள்  பள்ளிக்கூடத்துக்குச் சென்ற வேளையில் 49,000 பிள்ளைகள் நாடற்ற நிலைமை காரணமாக பள்ளிக்கூடத்துக்குப் போக முடியவில்லை என பிகேஆர் கூறியுள்ளது.

புத்ராஜெயாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வழி அந்த எண்ணிக்கை பெறப்பட்டது என்றும் சபா, சரவாக்கையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் தெரிவித்தார்.

அந்த பெரிய எண்ணிக்கை நமது நாட்டில் பெரிய அளவிலான கல்வி நெருக்கடியைக் குறிக்கிறது,” என அவர் ஒர் அறிக்கையில் சொன்னார்.

மலேசியாவில் பிறந்த சிலருக்கு பிறப்புச் சான்றிதழ்களையும் அடையாளக் கார்டுகளையும் வழங்க கூட்டரசு அரசாங்கம் மறுப்பதே பிரச்னைக்குக் காரணம் என சுரேந்திரன் கருதுகிறார்.

நாடற்றவர்களில் பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த அனாதைப் பிள்ளைகளான ஹரியும் ஹரனும் அடங்குவர்.

அவர்களுக்கு இப்போது வயது 12, 14 என மதிப்பிடப்படுகின்றது. அவர்கள் பள்ளிக்கூடத்துக்கே போக வில்லை. அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு அவர்களுக்குப் புகலிடம் அளித்துள்ள மய்யம் பல முறை முயற்சி செய்தது. ஆனால் அந்தப் பிள்ளைகளிடம் அடையாளப் பத்திரங்கள் இல்லாததால் அதன் வேண்டுகோள் மறுக்கப்பட்டது.

மை டாப்தார் இயக்கத்தின் போது அந்தப் பிள்ளைகளுடைய அவல நிலை எடுத்துக் காட்டப்பட்ட பின்னர் அவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டன.

ஆனால் அவர்களுடைய குடியுரிமைத் தகுதி ‘இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மை கார்டைப் பெறுவது சிரமமாகியுள்ளது.

“ஜோகூர் புலாயில் பிறப்புச் சான்றிதழ் இல்லாத 9 வயது ஸ்ரீ தர்ஷினி இவ்வாண்டு மீண்டும் பள்ளியில் சேருவது நிராகரிக்கப்பட்டுள்ளது. பேராக் ஈப்போவில் 10 வயதாம லோகேஸ்வரன் சரத்ராஜன், பள்ளியில் சேர்ப்பதற்கு அவனுடைய தந்தை பல முறை முயன்றும் பள்ளிக்கே போகவில்லை,” என சுரேந்திரன் சொன்னார்.stateless1

அரசமைப்பு கடமை

பள்ளி நிர்வாகிகள் அனுதாபத்துடன் பள்ளியில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் கூட அந்நியர்களாகப் பதிவு செய்யப்படுவது, கூடுதல் கட்டணங்களைச் செலுத்துவது போன்ற சிரமங்களுக்கு இலக்காகின்றனர் என்றும் அவர் கூறிக் கொண்டார்.

சிலர் தேர்வுக்கு பதிவு செய்வதிலும் பல்கலைக்கழகத்தில் சேருவதிலும் பிரச்னைகளை எதிர்நோக்குகின்றனர். அதற்கு ஒர் உதாரணம் செந்தூலைச் சேர்ந்த 17 வயது பி ரெஷினா என்பவர் ஆவார்.

கூட்டரசு அரசமைப்பின் 14வது பிரிவு, மலேசியாவில் எந்த ஒரு குழந்தையும் நாடற்றவர்களாக கருதப்படுவதைத் தடுக்கிறது.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது அரசாங்கமும் ஏன் கூட்டரசு அரசமைப்புக்கு முரணாக நடந்து கொள்கின்றனர் ? பிள்ளைகள் ஏன் அவலத்தை அனுபவிக்க வேண்டும் ?

கிடைக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்தி நஜிப், கல்வி அமைச்சர் முஹைடின் யாசின், அரசாங்கம் ஆகியோர் அந்த நெருக்கடியை உடனடியாகத் தீர்க்க வேண்டும்.

நாடற்றவர்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் புத்ராஜெயா மெதுவாக செயல்படுவதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் பிகேஆர் தலைவர்களில் சுரேந்திரனும் ஒருவர் ஆவார்.

 

TAGS: