கம்பள வணிகரான தீபக் ஜெய்கிஷன் பங்கு வைத்துள்ள Astacanggih Sdn Bhdன் பங்குதாரர்கள் கடந்த ஆண்டு ஜுன் மாதத்திலேயே தங்கள் பங்குகளை பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டிடம் விற்பதற்கு முன் வந்தனர்.
புர்சா மலேசியா பங்குச் சந்தைக்கு நேற்று சமர்பித்த ஒர் அறிக்கையில் பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் அதனைத் தெரிவித்துள்ளது.
Astacanggih-யில் 80 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கை புக்கிட் ராஜாவில் 200 ஏக்கர் மேம்பாட்டு நிலத்தை ஒரு சதுர அடி 18 ரிங்கிட் 37 சென் அல்லது மொத்த விலையான 160 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்குவதற்கான நிறுவனச் செயல் திட்டத்தில் ஒரு பகுதியாகும்,” என அந்த அறிக்கை தெரிவித்தது.
தீபக்கை மௌனமாக இருக்கச் செய்யும் பொருட்டு தற்காப்பு அமைச்சுக்கு ஒரு பகுதி சொந்தமான பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ், Astacanggih பங்குகளை கொள்முதல் செய்ததாகக் கூறப்படுவதை மறுக்கும் முயற்சியே அந்த அறிக்கை எனக் கருதப்படுகின்றது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டம் நடந்தது முதல் தீபக், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் எதிராக போர் தொடுத்து வருகிறார்.
நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்த போது செய்து கொள்ளப்பட்ட ஒரு பேரத்தை நிறைவேற்றத் தவறி விட்டதாக இதர பல விஷயங்களுடன் தீபக் கூறிக் கொண்டிருந்தார்.
அதன் விளைவாக அதே நிலம் தொடர்பில் Awan Megah Sdn Bhd- மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நேரிட்டது என்றும் அவர் சொல்லிக் கொண்டார்.
கடந்த மாத இறுதியில் தீபக் திடீரென அந்த வழக்கை மீட்டுக் கொண்டார். பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் Astacanggih பங்குகளை கொள்முதல் செய்ததைத் தொடர்ந்து தீபக் வாங்கப்பட்டு விட்டார் என்ற ஊகங்கள் எழுந்தன.
2005ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து அவான் மெகா-வுடன் பேச்சுக்கள் நடத்தப்படுவதாகவும் பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் அறிக்கை தெரிவித்தது.
“என்றாலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நீண்ட காலம் பேச்சு நடத்திய பின்னர், 2012 டிசம்பர் மூன்றாவது வாரத்தில் தான் இறுதி ஒப்பந்தங்களை பவுஸ்டெட் குழுமம் செய்து கொள்ள முடிந்தது.”
இப்போது வாங்கப்பட்டுள்ள 200 ஏக்கர் நிலத்தையும் பவுஸ்டெட் குழுமமும் Lembaga Tabung Angkatan Tentera அமைப்பும் மொத்தம் 60 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள Jendela Hikmat Sdn Bhd-க்குச் சொந்தமான 700 ஏக்கர் நிலத்தையும் சேர்ப்பதின் மூலம் பல பொருளாதார நன்மைகளை அடைய முடியும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.