நிலச் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து புஞ்சாக் செத்தியாவாங்சாவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள வீடுகள் பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்ட பின்னர் அவற்றின் குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடு கொடுப்பதில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் கூறியிருக்கிறார்.
இடிக்கப்படும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள மற்றவர்களுக்கும் அரசாங்கம் எந்த இழப்பீடு கொடுக்கவில்லை என அவர் சொன்னார்.
“அந்த விவகாரத்தை மேம்பாட்டு நிறுவனமும் வீடுகளை வாங்கியவர்களும் மட்டுமே தீர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் அதிக ஆபத்துள்ள பகுதியில் சொத்துக்களை வாங்கியுள்ளனர்,” என நேற்று கோலாலம்பூரில் நிலச் சரிவு நடந்த இடத்துக்கு அருகில் ராஜா நோங் சிக் நிருபர்களிடம் கூறினார்.
குடியிருப்பாளர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து உதவி வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் சொன்னார்.
“இதில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ற கேள்வியே எழவில்லை. அந்தச் சம்பவம் எதிர்பாராதது ஆகும்,” என்றார் அவர்.
“வீட்டு உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகள் மீது எந்த மகஜரையும் அனுப்புவதற்கு உரிமைகளைப் பெற்றுள்ளனர்.”
“அரசாங்கம் பொறுப்பேற்குமாறு செய்யப்பட்டால் அது வரி செலுத்தும் மக்களுக்கு நியாயமாகாது என நான் எண்ணுகிறேன்,” என்றும் ராஜா நோங் சிக் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தில் மலைச்சாரல்களில் 50 முதல் 60 மீட்டர் உயரத்துக்கு எழுப்பப்பட்டிருந்த காங்கீரிட் சுவர் சரிந்தது. அதனால் புஞ்சாக் செத்தியாவாங்சா வில் உள்ள பல பிரமுகர்களுடைய வீடுகள் பாதிக்கப்பட்டன.
அந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
பெர்னாமா