“ஐந்து ஆண்டுகளில் பலவற்றை நாசப்படுத்தி விடலாம் என்கிறார் மகாதீர். நீதித் துறை, பேச்சுச் சுதந்திரம், ஊடகங்கள் ஆகியவற்றை நாசப்படுத்திய உங்கள் சொந்த அனுபவத்திருந்து நீங்கள் பேசுகின்றீர்களா ?”
மகாதீர்: பக்காத்தானுக்கு ஐந்து ஆண்டுகள் கூட ஆபத்தானது
பெர்ட் தான்: பக்காத்தான் ராக்யாட் ஐந்து ஆண்டுகளுக்குக் கூட ஆட்சி புரிவது ஆபத்தானது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சொல்கிறார். ஆனால் அதற்கு அவர் பலவீனமான காரணங்களைச் சொல்லியிருக்கிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை மட்டுமே அவர் நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
மகாதீர், பக்காத்தான் என்பது அன்வார் மட்டுமல்ல. அதை விட மேலானது. மூன்று சம நிலையான தோழமைக் கட்சிகளைக் கொண்ட கூட்டணி அதுவாகும். அது சர்வாதிகார அம்னோவைப் போல் அல்ல அது. அம்னோ தான் பிஎன் -னில் உள்ள ஒரே எஜமானர்.
அம்னோ எதனை முடிவு செய்தாலும் மசீச, மஇகா போன்ற பெரிய பங்காளிக் கட்சிகளுக்கு அதனை எதிர்க்கும் துணிச்சல் இருக்காது. பிஎன் தான் அம்னோ, அம்னோ தான் பிஎன் எனச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவும் போக்கை அன்வார் பின்பற்றுகின்றாரா என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாது. கடந்த 50 ஆண்டுகளாக அதனை செய்து வரும் பிஎன் -னைக் காட்டிலும் அவர் மோசமாக இருக்க முடியாது.
ஜாடெட்: ஐந்து ஆண்டுகளில் பலவற்றை நாசப்படுத்தி விடலாம் என்கிறார் மகாதீர். நீதித் துறை, பேச்சுச் சுதந்திரம், ஊடகங்கள், தேர்தல் நடைமுறைகள், கல்வி முறை, போலீஸ் படை ஆகியவற்றை நாசப்படுத்திய உங்கள் சொந்த அனுபவத்திருந்து நீங்கள் பேசுகின்றீர்களா ?
அபாசிர்: அம்னோவும் மகாதீரும் கடந்த 50 ஆண்டுகளில் நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ள சேதங்களைச் சரி செய்யஐந்து ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்.
ஸ்விபெண்டர்: மகாதீருடைய 22 ஆண்டு கால ஆட்சியின் தவறுகளைச் சரி செய்ய பக்காத்தானுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் தேவைப்படும். ஊழல், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது, இன, சமய பாரபட்சம் ஆகிய பிரச்னைகளை ஒரே நாளில் தீர்க்க முடியாது.
ஒஎம்ஜி: ஆசிய நிதி நெருக்கடிக்கு என்ன காரணம் ? அப்போதைய மகாதீர் அரசாங்கம் போன்ற பொறுப்பற்ற அரசாங்கங்களே அதற்கு காரணம். வெளி வாணிக பற்று வரவு, வரவு செலவுத் திட்டம் ஆகிய இரண்டிலும் பற்றாக்குறை பெருகியது. வளர்ச்சி என்ற பெயரில் தனியார்,பொதுத் துறைக் கடன்கள் அதிகரித்தன.
அந்த நிலை ஜார்ஜ் சோரோஸ் போன்ற நாணய ஊக வணிகர்கள் அடிப்படை ஏதுமில்லாமல் செயற்கையாக அமெரிக்க டாலருக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டு வந்த ரிங்கிட்டை தாக்குவதற்கு வாய்ப்புக் கொடுத்தது.
பொருளாதாரத்துக்கு ஊக்கமூட்ட பணத்தை அச்சிடுவது தான் அப்போதைய அரசின் தீர்வாக இருந்தது. மேற்கத்திய நாடுகள் இப்போது அதனைத் தான் செய்து கொண்டிருக்கின்றன.
அனைத்துலகப் பண நிறுவனத் தீர்வை மகாதீர் ஏற்றுக் கொண்டிருந்தால் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவும் அவரது போக்கிற்கு உலை வைக்கப்பட்டிருக்கும்.
தமது புதல்வருக்குச் சொந்தமான, நலிவடைந்த நிலையில் இருந்த கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை அரசாங்க நிறுவனமான மலேசிய அனைத்துலக கப்பல் போக்குவரத்துக் கழகத்தைப் பயன்படுத்தி ( எம்ஐஎஸ்சி ) காப்பாற்றியிருக்க முடியாது.
அவரது தீர்வுக்கு அப்பாவி மக்கள் இன்னும் விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் நாட்டின் கடனும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையும் தீரவில்லை, தொடருகின்றன.