கேஎல்ஐஏ2 என அழைக்கப்படும் புதிய குறைந்த கட்டண விமான நிலையம் இவ்வாண்டு ஜுன் 28ம் தேதி திறக்கப்படும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.
1998ம் ஆண்டு அதே நாளன்று கேஎல்ஐஏ என்ற கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலயம் திறக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டு மே மாதம் புதிய குறைந்த கட்டண விமான நிலையம் தயாராகி விடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும் அது திறக்கப்படுவதற்கு முன்னர் சில சிறிய பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியுள்ளதாக நஜிப் தெரிவித்தார்.
“புதிய விமான முனையம் தயாரானதும் நாங்கள் சில சிறிய பிரச்னைகளைத் தீர்ப்போம். பின்னர் கேஎல்ஐஏ2 முழுமையாக செயல்படத் தொடங்கும்.”
கேஎல்ஐஏ திறக்கப்பட்ட நாளன்று புதிய விமான முனையமும் திறக்கப்பட வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன். ஜுன் 28ம் தேதி அதனைத் திறப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.”
நஜிப் இன்று ஏர் ஏசியாவுடனான ஒரே மலேசியா ஒருங்கிணைப்புத் திட்டம் தொடங்கப்படுள்ளதைக் குறிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரே மலேசியா ஏர் ஏசியா விமானத்தை செப்பாங்கில் உள்ள குறைந்த கட்டண விமான முனையத்தில் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
அந்த நிகழ்வில் இளைஞர் விளையாட்டு அமைச்சர் அகமட் சாப்ரி சின், ஏர் ஏசியா குழு தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்ணாண்டஸ், Malaysia Airports Holdings Bhd (MAHB) நிர்வாக இயக்குநர் பஷீர் அகமட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறைந்த கட்டண விமானப் பயணங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு 3.6 பில்லியன் ரிங்கிட் செலவில் கேஎல்ஐஏ2 கட்டப்பட்டுள்ளது. 257,000 சதுர மீட்டர் பரப்புள்ள அது ஆண்டு ஒன்றுக்கு 45 மில்லியன் பயணிகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-பெர்னாமா