நீர் விநியோகத்தை திறனற்ற சபாஷிடம் ஒப்படைத்ததால் ஏற்படும் தொல்லைகள், சேவியர்

கோலாலம்பூரின் பல இடங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு சபாஸ் முழு பொறுப்பு ஏற்கXavierJayakumar வேண்டும். வீணாக சிலாங்கூர் மாநில  அரசைக்  குறை கூறி  அரசியல் நடத்தவேண்டாம் என்று டாக்டர் சேவியர் எச்சரித்தார்.

ஒரு நீர் விநியோக நிலையத்தில் எல்லா வேளைகளிலும் மூன்று பம்புகள்  செயல்பட வேண்டும் . அதே நேரத்தில் இரண்டு பம்புகள் எல்லா வேளைகளிலும் தயார் நிலையில்  இருக்க வேண்டும். எந்த வேளையிலும் மூன்றில்  ஒரு தண்ணீர் பம் நிறுத்தப்பட்டுச் செப்பனிடப்படும் வேளையில்  தயார் நிலையில் இருக்கும் மற்றப் பம் செயல்படத் துவங்கும் என்று சேவியர் விவரித்தார்.

ஆனால் கோலாலம்பூரில்  இப்பொழுது  கடந்த சில நாட்களாகக் குடிநீர் தட்டுப்பாடு நிலவ ஐந்து பம்புகளும் ஒருசேரச் செயலிழந்துதான் காரணம்  என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு  சிலாங்கூர் மாநில  அரசு வழங்க மறுக்கும் நிதிகளைக் காரணமாகக்  காட்ட சபாஷ் முயல்கிறது. ஆனால்  எவ்வேளையிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய இரண்டு பம்புகள் எப்படி நிரந்தரமாகச் செயல் இழந்து கிடக்கிறது என்பதற்கு  சபாஷ்  சரியான விளக்கத்தை  அதன் வாடிக்கையாளர்களுக்கும், மாநில அரசுக்கும் அளிக்கவேண்டும் என்று சேவியர் கோரினார்.

சிலாங்கூரில் நீர் தட்டுப்பாட்டை உருவாக்க முயன்ற சபாஷ், இப்பொழுது  கோலாலம்பூரில் தனது கைங்கரியத்தைக்  காண்பிக்கத் தொடங்கியுள்ளது என்பதை மக்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முற்றிலும் அரசியல் வாதிகளின் கட்டுப்பாட்டில் அல்லது அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு  மரியாதை கொடுப்பதில்லை  என்பதற்குச் சரியான உதாரணம் சபாஷ். அது முன்னைய பாரிசான்  அரசுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களின்  விதிமுறைகள் பலவற்றை மீறியுள்ளதுடன்,  மக்களுக்கு மாநில  அரசு வழங்கி வரும் இலவசக் குடிநீர்  அமலாக்கத்தின் மீதும் கேள்வி எழுப்பி வருகிறது என்று சேவியர் மேலும் கூறினார்.

syabasசிலாங்கூருக்கும் கோலாலம்பூருக்கும் நீர் விநியோக உரிமம் கொண்டுள்ள ஒரு  நிறுவனமான சபாஷ் பாரிசான்  அரசின் முழு ஆதரவைப் பெற்றுள்ளதால், மக்களின்  அடிப்படை தேவைகளின் முக்கியத்துவத்தையும், அதன் சிறும்பான்மை பங்குதாரர்களின் ஆலோசனைகளையும் ஒதுக்கித்தள்ளி,  குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது.  வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டுவரும்  இது போன்ற இடர்பாடுகள் சபாஷ் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதைக் காட்டுகின்றது.

சபாஷின் நம்பகமற்ற சேவையால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு விடைகான  குடிநீருக்கான தட்டுப்பாட்டை  எதிர்நோக்கும் மக்கள் சபாஷின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேவியர் ஆலோசனை கூறினார்.

அந்தச் சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான தகுந்த  ஆதாரங்களைத் திரட்டி வாடிக்கையாளர்களுக்கு வழங்க மாநில அரசு தயாராக இருக்கிறது. இன்று ஏற்பட்டிருக்கும் குடிநீர் தட்டுப்பாடு  முற்றிலும் மனிதத் தவறுகளால் ஏற்படுத்தப்பட்டவை. சாதாரணமாக ஐந்து தண்ணீர் பம்புகளை முறையாகப் பராமரித்து வாடிக்கையாளர்களுக்கு எந்த இடர்பாடுமின்றிக் குடிநீர் வழங்க ஆற்றல் இல்லாத நிறுவனத்திடம், எப்படி 7 மில்லியன் மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் பொறுப்பை மாநில அரசு தொடர்ந்து வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார் டாக்டர் சேவியர்.

ஆக, மக்களுக்குக் குறைவான கட்டணத்தில் நம்பகமான சேவைகளை வழங்க மாநில அரசு அல்லது அரசாங்க நிறுவனங்களால் மட்டுமே முடியும் என்பதால் துணைப் பிரதமர் முகைதின் யாசின், இதற்கு மேலும் மக்களின் குடிநீர் விவகாரத்தில்  அரசியல் விளையாட வேண்டாம். நீர்வள, எரிசக்தி மற்றும் பசுமை தொழில் நுட்பத்திற்கான அமைச்சர் பீட்டர் சின் அம்னோ தலைவர்களின்  நிறுவனங்களுக்குக்  கைப்பாவையாக இருப்பதைக் கைவிட்டு மக்களின் தேவைகளுக்குச்  செவிசாய்க்க வேண்டும்  என்று கேட்டுக் கொண்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
   

 

TAGS: