மெர்தேக்கா அரங்க நிர்வாகம் பக்காத்தானைச் சந்திப்பதை தவிர்க்கிறது

Merdeka-HimpunanHimpunan Kebangkitan Rakyat  என அழைக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கான தேதி நெருங்கும் வேளையில் அதனை நடத்துவதற்கு மெர்தேக்கா அரங்கத்தை பக்காத்தான் ராக்யாட் இன்று வரை பெறவில்லை.

பக்காத்தான் ராக்யாட்டைச் சந்திப்பதை அரங்க நிர்வாகம் தவிர்த்து வருகின்றது.

கோலாலம்பூரில் அந்த அரங்கின் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்ற குழு ஒன்றுக்கு தலைமை தாங்கிய பாஸ் இளைஞர் பிரிவுச் செயலாளர் கைருல் பைசி அகமட் கமீல், கடந்த இரண்டு வாரங்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இடத்தைப் பெறுவதற்கு பக்காத்தான் முயன்று வருவதாகச் சொன்னார். ஆனால் எந்தப் பலனும் இல்லை.

அந்த அரங்கத்தைப் பயன்படுத்துவதற்கு வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை மெர்தேக்கா பாரம்பரிய அறக் கட்டளைக்கு  ஏற்பாட்டுச் செயலகம் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அனுப்பியதாக அவர் தெரிவித்தார். அத்துடன் அந்த அலுவலகத்துடன் தொலைபேசி வழி தொடர்பு கொள்ளவும் பல முறை முயற்சி செய்யப்பட்டது

பதில் ஏதும் இல்லாததால் கோலாலம்பூர் மெனாரா பிஎன்பி-யில் உள்ள அதன் நிர்வாகத் தலைமையகத்தின் வாசலுக்கு இன்று பிற்பகல் பக்காத்தான் குழு சென்றது.

ஆனால் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் பக்காத்தான் பேராளர்கள் நிர்வாகத்தினரைச் சந்திப்பதற்கு அனுமதிக்கவில்லை. அலுவலக நிர்வாகிகள் ‘கூட்டத்தில்’ இருப்பதாக’ பேராளர்களிடம் காரணம் கூறப்பட்டது.

கிட்டத்தட்ட அவர்கள் அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தும் எந்தப் பலனும் இல்லை. அதனால் விரக்தி அடைந்த பிகேஆர் இளைஞர் செயலாளர் ஜுலாய்லி ஜெமாடி மெர்தேக்கா அரங்க நிர்வாகம் மீது தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

“அவர்கள் எங்களை இப்படி நடத்தியுள்ளது வருத்தமளிக்கிறது. இது மலேசியப் பண்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை,” என்றார் அவர்.

 

TAGS: