புவாட்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லுடன் 100,000 பாஹாசா மலேசியா பைபிள்கள் அச்சிடப்படுகிறதா ?

puad‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தும் 100,000 பாஹாசா மலேசியா பைபிள்களை டிஏபி அச்சிடும் என்றும் அவை பக்காத்தான் ராக்யாட் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதற்குப் பதில் அளிக்குமாறு அந்தக் கட்சியை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் முகமட் புவாட் ஸார்காஷி கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தத் தகவல் தமக்குத் தெரிவிக்கப்பட்ட போது தாம் அதிர்ச்சி அடைந்ததாக கல்வித் துணை அமைச்சருமான அவர் சொன்னார். அவரது செய்தி இன்று உத்துசான் மலேசியா நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

“அந்தத் தகவல் கிடைத்த ஆதாரத்தை நான் சொல்ல முடியாது. அதனால் தான் நான் கேட்கிறேன். எனக்கு அது பற்றித் தெரிவிக்கப்பட்டது. அது உண்மையா இல்லையா என்பதை டிஏபி தெரிவிக்க வேண்டும் என நான் கோருகிறேன்.”

“அந்த நடவடிக்கையை பாஸ் ஒப்புக் கொள்கின்றதா இல்லையா என்பது பற்றி அந்தக் கட்சி தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்,” என அவர் புத்ராஜெயாவில் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இலவச பைபிள்கள்களை டிஏபி  கிளந்தான், கெடா, சிலாங்கூர், பினாங்கு ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படும்  என்றும் முகமட் புவாட் கூறிக் கொண்டார்.

ஆனால் அவை “எந்த ஒரு அடிப்படையும் இல்லாத பைத்தியக்காரத்தனமான பொய்கள்” என டிஏபி தலைமைச்  செயலாளர் லிம் குவான் எங் அந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.

முகமட் புவாட் ஆதாரத்தைக் காட்ட வேண்டும் அல்லது தமது ‘பொய்களை’ மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

“அந்தப் பொய்கள் பைத்தியக்காரத்தனமானவை. ஏனெனில் டிஏபி சமய விவகாரங்களில் சம்பந்தப்படுவதே இல்லை. காரணம் சமயம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கை சம்பந்தப்பட்டது என அது கருதுவதாகும். அந்த விஷயத்தை பயன்படுத்தவும் கூடாது, அரசியலாக்கவும் கூடாது,” என லிம் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

“பாஹாசா மலேசியாவில் 100,000 பைபிள்களை அச்சிட்டு வெளியிடும் அளவுக்கு டிஏபி-யிடம் வளங்களோ ஆற்றலோ இல்லை,” என்றும் லிம் சொன்னார்.

அம்னோ தலைவர் ஒருவர் கூறிய ” அந்தப் பைத்தியக்காரத்தனமான பொய்கள்” அம்னோ கட்டுப்பாட்டில் உள்ள நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா ஆகிய நாளேடுகளில் வெளியிடப்பட்டுள்ளது துரதிர்ஷ்டமானது என்றார் அவர்.

அவை மலேசியாவில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடத்திலும் இந்த நாட்டிலுள்ள பல்வேறு சமயங்களுக்கு இடையிலும் டிஏபிக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதற்கு மேற்கொள்ளப்படும் “ஆபத்தான தந்திரங்கள்” என அவர் வருணித்தார். அவை குறித்து அவர் வெறுப்பும் தெரிவித்தார்.

‘பொது ஒழுங்கைச் சீர்குலைக்கக்கூடிய’ விஷயத்தை வெளியிட்டதற்காக முகமட் புவாட் மீதும் மூன்று நாளேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் போலீஸ் புகார்களை டிஏபி சமர்பிக்கும் என அவர் மேலும் சொன்னார்.

“புவா, மூன்று நாளேடுகள் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் நாங்கள் பரிசீலிப்ப்போம்,” என்றும் லிம் தெரிவித்தார்.

 

TAGS: