மற்ற சமயங்களைச் சார்ந்த மக்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருக்கிறார்.
திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ள மூல அர்த்தத்தை அது தரவில்லை என்றாலும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்றார் அவர்.
ஊடகங்களைப் பயன்படுத்தி அதனைச் சர்ச்சைக்குரிய அம்சமாக அரசாங்கம் மாற்றி வருவது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், பிஎன் -னுக்கு அது புரியவில்லை என்றும் அதனால் பல்வேறு சமய மக்களுக்கு இடையில் உறவுகள் நலிவடைவதற்கு அது வழி கோலி விட்டது என்றும் சொன்னார்.
அந்த விஷயம் மீது தாங்கள் இணக்கம் கண்டுள்ளதாகவும் அப்துல் ஹாடி அது பற்றி மேலும் விளக்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சொன்னார்.
2010 ஜனவரி 4ல் தாம் விடுத்த ஊடக அறிக்கைக்கு இணங்க பாஸ் நிலை ஒரே மாதிரியாக இருந்து வருகிறது என்றும் அப்துல் ஹாடி சொன்னார்.
அந்த ஊடக அறிக்கை மலேசிய இஸ்லாமியப் புரிந்துணர்வுக் கழகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே ‘அல்லாஹ்’ என்னும் சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய புனிதமான வார்த்தை என்பதால் அதனை சிலாங்கூரில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதற்கு சிலாங்கூர் சுல்தான் ஆணை பிறப்பித்துள்ளதாக அந்த மாநில இஸ்லாமிய விவகார மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமது அறிக்கை தெளிவானது என்பதால் சுல்தான் ஆணை பற்றி கருத்துரைக்க விரும்பவில்லை என அப்துல் ஹாடி சொன்னார்.
பாஸ் கட்சி நிலையை அன்வார் வரவேற்றார். அது பக்காத்தானுடைய ஐக்கியமான நிலையுமாகும். ஆகவே அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்துவது தடுக்கப்படவில்லை. அந்த விஷயத்தையும் முஸ்லிம்கள் புனிதமான இடத்தில் வைத்துப் போற்றுவதையும் (muliakan nama Allah) தேவாலயங்கள், முஸ்லிம் அல்லாதவர் உட்பட எல்லாத் தரப்புக்களும் மதிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.
13வது பொதுத் தேர்தலுக்கு இறுதிக் கட்டம்
எதிர்த்தரப்புக் கூட்டணி இந்த அத்தியாயத்திலிருந்து விடுபட்டு பொதுத் தேர்தலுக்கான கடைசிக் கட்டத்துக்கு முன்னேறியுள்ளதாக லிம் கிட் சியாங் வலியுறுத்தினார்.
“நாட்டு வரலாற்றில் பொதுத் தேர்தல் இவ்வளவு காலம் தாமதிக்கப்பட்டது இல்லை. பிரதமர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது என நான் எண்ணுகிறேன். குறிப்பாக அவர் சொந்த அதிகாரத்தை இன்னும் பெறவில்லை.”
“இது கடைசிக் கட்டமாகும். தேர்தலை சுதந்திரமாகவும் தூய்மையாகவும் நடத்துமாறு நான் சம்பந்தப்பட்ட தரப்புக்களைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம் மலேசிய ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்துள்ளதை உலக்குக்குக் காட்டுவதற்கு வரும் தேர்தல் முக்கியமானதாகும்.”
எந்த விதமான இடையூறும் இல்லாமல் அரசாங்க மாற்றம் நிகழ முடியும் என்பதை மலேசியர்கள் உலகிற்கு நிரூபிப்பதற்கு இதுவே தக்க தருணம் என்றும் லிம் சொன்னார்.