அம்னோவுக்கு ஊடகங்கள் முக்கியமானவை என்கிறார் நஜிப்

najibமக்களுடைய உணர்வுகளையும் அவாக்களையும் அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் இடையராக (intermediary) ஊடகங்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராகக் கூறப்படுகின்ற குறைகளையும் கண்டனங்களையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். அப்போது தான் அரசாங்கம் மேம்பாடுகளைக் கொண்டு வர முடியும்.

“மக்களுடைய  நன்மைகளை நோக்கமாகக் கொண்ட, உண்மை நிலவரங்கள் அடிப்படையில் அமைந்த குறைகளையும் கண்டனங்களையும் நாங்கள் ஒதுக்குவது இல்லை.”

“13வது பொதுத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி பொய்யான, அவதூறான, ஜோடிக்கப்பட்ட செய்திகளை நாங்கள் விரும்பவில்லை. ஊடகங்களும் அவற்றை புறக்கணிக்க வேண்டும்,” என நேற்றிரவு 2012ம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவையின் ஊடகப் பாராட்டு விருந்தில் நஜிப் கூறினார்

அம்னோவுக்கும் ஊடகங்களுக்கும் இடையில் உறவுகள் எப்போதும் அணுக்கமாகவும் இணக்கமாகவும் இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்த அவர், அரசாங்கம் குறித்த துல்லிதமான, சரியான செய்திகளை வெளியிடுவதிலும் பரப்புவதிலும் அவை முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார்.

“13வது பொதுத் தேர்தல் நெருங்கும் காலத்தை நான் மோசமான காலம் என்று தான் சொல்வேன். காரணம் மக்கள் கண்களில் அரசாங்கத்தின் தோற்றத்தை மக்களுக்கு மாசுபடுத்தி காண்பிக்கும் பொருட்டு கொஞ்சம் கூட உண்மையில்லாத செய்திகள் ஜோடிக்கப்படுகின்றன.”

ஒர் அரசியல் கட்சி, நாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கும் பெரும்பான்மை மக்களுடைய நலன்களுக்கு உகந்த கொள்கைகளை அமலாக்குவதற்கும் மக்களுடைய நம்பிக்கை அவசியம் என்றும் நஜிப் சொன்னார்.

“அதனால் அம்னோ மீதான ஊடகங்களின் பங்கு குறித்து நாங்கள் தீவிரக் கவனம் செலுத்துகிறோம். காரணம்

நாம் நல்ல முறையில் தொடர்பு கொள்ளா விட்டால் ஒரு புனித நோக்கத்துக்காக நாங்கள் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகள் கூட எதிர்மறையாக விளக்கப்படலாம் அல்லது மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.”

“அம்னோ பற்றியும் அரசாங்கம் பற்றியும் ஏன் இந்த நாட்டில் நிகழ்கின்ற எல்லா நிகழ்வுகள் பற்றியும் துல்லிதமாகவும் சரியாகவும் ஊடகங்கள் செய்திகளைத் தர வேண்டும். அம்னோ போன்ற அரசியல் கட்சிகள் செய்கின்ற பணிகளை குறிக்கோளுடன் மதிப்பீடு செய்ய வேண்டும்,” என அம்னோ தலைவருமான நஜிப் சொன்னார்.

 

TAGS: