சிலாங்கூர் பிஎன்: கேஎல்112 பங்கேற்பாளர்கள் ‘கட்சி ஊழியர்கள்’

lorryநேற்று நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டது பற்றி சிலாங்கூர் பிஎன் கவலைப்படவில்லை. மாறாக பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கட்சி ஊழியர்கள் என அது கூறியது.

“நாங்கள் கவலைப்படவில்லை. அதற்கு மிகவும் எளிதான காரணம் இது தான்: அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் கட்சி ஊழியர்கள். அவர்களில் 80 விழுக்காட்டினர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என நான் எண்ணுகிறேன்,” என சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் தெரிவித்தார்.

“நாங்கள் குறிப்பிடத்தக்க சீனர், இந்தியர் ஆதரவைக் காணவில்லை. அது எதிர்பார்க்கப்பட்டதே. ஏனெனில் அவர்கள் மக்களை கிளந்தான், கெடா மற்ற இடங்கள் ஆகியவற்றிலிருந்து இடம் பெயரச் செய்து விட்டனர்.”lorry1

அவர் இன்று கிள்ளானில் பொங்கல் விழாவில் நிருபர்களைச் சந்தித்த போது அவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் பிஎன் நடத்திய இதை விடப் பெரிய பேரணியில் 130,000 பேர் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.

நேற்று காலையில் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் கோலாலம்பூர் சாலைகள் வழியாக நடந்து சென்று மெர்தேக்கா அரங்கத்தில் நடத்தப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டனர்.

அந்தப் பேரணிக்கு பக்காத்தான் ராக்யாட்டும் பல்வேறு அரசு சாரா அமைப்புக்களும் ஏற்பாடு செய்திருந்தன.

அதிகாரிகள் பெர்சே 2.0, பெர்சே 3.0 போன்ற மற்ற முந்திய பேரணிகளில் கடைப்பிடித்த நடைமுறைகளுக்கு மாறாக இந்தப் பேரணியின் போது ஒதுங்கியிருக்கும் போக்கைப் பின்பற்றினர். நேற்று அந்த நிகழ்வு நடைபெற்ற வேளையில் விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

 

TAGS: