பாஸ்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்தக் கூடாது

alkitabபாஸ் கட்சி, முஸ்லிம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீதான தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது.

இஸ்லாம் அல்லாத சமயப் புத்தகங்களில் ‘இறைவன்’ என்ற சொல்லுக்கு மொழிபெயர்ப்பாக ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்படக் கூடாது என அதன் Syura மன்றம் முடிவு செய்துள்ளதே அதற்குக் காரணம்.

“அது அனுமதிக்கப்படவில்லை. காரணம் அர்த்தத்தில் அது தவறானதாகும், தவறாகப் பயன்படுத்தப்படுவதாகும், உண்மையான தேவைகளை அது பூர்த்தி செய்யவில்லை. அதனால் குழப்பம் ஏற்படும். ஆகவே அது தவிர்க்கப்பட வேண்டும்,” என நேற்றிரவு அந்த மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட  அறிக்கை கூறியது.

பாஸ் கட்சியில் முடிவுகளை எடுக்கும் உயர் நிலை அமைப்பாக Syura மன்றம் விளங்குகிறது. அதற்கு ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் தலைமை தாங்குகிறார்.

அந்த அறிக்கையில் நிக் அப்துல் அஜிஸும் ஆன்மீகத் துணைத் தலைவர் ஹரோன் டின் -னும் கையெழுத்திட்டுள்ளார்கள்.

முஸ்லிம் அல்லாதார் தங்கள் சமய நூல்களில் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்த முடியுமா முடியாதா என்பதைத் தெளிவாக விளக்காத கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கருத்துக்கள் மீது எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்குவதற்காக அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்கு முஸ்லிம் விளக்கத்தைத் தவிர, வேறு அர்த்தங்களைக் கொடுப்பதின் மூலம் மற்ற சமயங்களைச் சார்ந்த மக்கள் அந்த சொல்லைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

அதே நேரத்தில் மற்ற சமயங்களைச் சார்ந்த மக்கள் தங்கள் சமய நடைமுறைகளில் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை என்றும் அப்துல் ஹாடி கூறினார்.

அப்துல் ஹாடியின் நிலையை பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவம் ஏற்றுக் கொண்ட போதிலும் அதனால் பாஸ் கட்சி இரண்டு முகாம்களாக பிளவுபட்டது.

நிக் அப்துல் அஜிஸ், துணைத் தலைவர் முகமட் சாபு, இளைஞர் தலைவர் நஸ்ருடின் ஹசான், உலாமாப் பிரிவுத் துணைத் தலைவர் மாஹ்போட்ஸ் முகமட் ஆகிய பாஸ் தலைவர்கள் அப்துல் ஹாடியின் நிலையை ஆதரித்தனர்.

தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி, ஹரோன், உலாமா தலைவர் ஹருண் தாயிப், தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் ஆகியோர் பைபிள் மலாய் பதிப்பு போன்ற மற்ற சமய நூல்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 

TAGS: