ஜெயகுமார் “எம்பி நிதிகள்” மீதான முறையீட்டில் தோல்வி

jeyaநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு தொகுதி ஒதுக்கீடுகள் விநியோகம் மீதான அரசாங்க முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி கோரி சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் மைக்கல் ஜெயகுமார் செய்து கொண்ட முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அந்த முடிவைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட கீழ் நீதிமன்ற முடிவை நிராகரித்து 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ராவ்ஸ் ஷாரிப் தலைமையில் கூடிய ஐவர் கொண்ட குழு ஏகமனதாக அந்த முடிவைச் செய்தது. ஒதுக்கீடுகளை நிர்வாகம் செய்வது நிர்வாகத்தின் தனி உரிமையாகும். அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என அவர் சொன்னார்.

“விசாரணையைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற முடிவில் நாங்கள் எந்த அர்த்தத்தையும் காணவில்லை. அந்த முடிவை முறையீட்டு நீதிமன்றம் தள்ளி வைத்தது சரியானதாகும். நாங்களும் அதே கருத்தை (முறையீட்டு நீதிமன்றம்) கொண்டுள்ளோம்.”

“எழுப்பப்பட்டுள்ள விஷயங்களை நீதி அடிப்படையில் மறு பரிசீலினை செய்ய முடியாது,” என அவர் தீர்ப்பளித்தார்.

என்றாலும் செலவுத் தொகையை கொடுக்குமாறு நீதிமன்றம் ஜெயகுமாருக்கு ஆணையிடவில்லை.

எஸ் அம்பிகா ஜெயகுமாரைப் பிரதிநிதித்த வேளையில் முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் சுஸானா அத்தான் பிரதிவாதிகளுக்கு ஆஜரானார்.

2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொகுதி நிதிகளுக்கான தனது விண்ணப்பத்தை பேரா மேம்பாட்டு அலுவலகம் நிராகரித்த பின்னர் ஜெயகுமார் அந்த வழக்கைத் தொடர்ந்தார்.jeya1

மற்ற விஷயங்களுடன் சிறப்பு தொகுதி ஒதுக்கீடுகள் அரசியல் தொடர்பு வேறுபாடின்றி எல்லா எம்பி-க்களுக்கும் கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 8(1)ன் கீழ் வழங்கப்பட வேண்டும் என பிரகடனம் செய்ய வேண்டும் என ஜெயகுமார் தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு தொகுதி ஒதுக்கீடுகளை தங்கள் விருப்பம் போல் விநியோகம் செய்வதற்குத் தங்களுக்கு உள்ள அதிகாரங்களை விளக்கும்படியும் 2008 தொடக்கம் நிதி வழங்குவதற்கான நடைமுறைகளையும் தெளிவுபடுத்தும்படியும் நீதிமன்றம், பிரதமர் துறையில் உள்ள அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு தலைமை இயக்குநருக்கும் பேரா மேம்பாட்டு அலுவலக இயக்குநருக்கும் அரசாங்கத்துக்கும் ஆணையிட வேண்டும் என்றும் ஜெயகுமார் கோரியிருந்தார்.