ஜோகூர் பாருவில் நேற்றிரவு பிகேஆர், பிஎன் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அதனால் பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸாமி நிக் அகமட் செராமா நிகழ்வை நடத்த முடியவில்லை.
தாமான் ஸ்ரீ ஸ்துலாங்கில் இரவு எட்டு மணி வாக்கில் செராமா மண்டபத்துக்குள் தம்மை நுழைய விடாமல் பிஎன், அம்னோ டி சட்டைகளை அணிந்திருந்த 70 இளைஞர்கள் இரண்டு முறை தடுத்து விட்டதாக நிக் நஸாமி சொன்னார்.
முதலாவது முயற்சியில் அம்னோ டி சட்டைகளை அணிந்திருந்த 20 குடியிருப்பாளர்களும் மக்களும் தம்மை வழி மறித்ததாகவும் பதற்றம் அதிகரித்ததால் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
“எங்கள் செராமைவை நிறுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை எனப் போலீசார் அவர்களிடம் கூறினர். ஆனால் அவர்கள் அதிகமான நண்பர்களை அழைத்தனர். அதனால் நிலைமை மேலும் பதற்றம் அடைந்தது,” என ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினருமான நிக் நஸாமி தெரிவித்தார்.
இன்னொரு வாயில் வழியாக செராமா மய்யத்துக்குள் செல்ல தாம் முயன்ற போது மீண்டும் தடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். அப்போது என்னையும் என் வாகனத்தையும் உதைத்தனர். போலீசார் வந்து அந்த மோதலை நிறுத்தினர். வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் தாம் உட்பட யாரும் மோதலில் காயமடையவில்லை என்றும் நிக் நஸாமி சொன்னார்.
அவர் மஜிடி போலீஸ் நிலையத்தில் இரவு 10 மணிக்கு புகார் செய்தார். கூடாரங்கள் போன்ற பொருட்களையும் உள்ளூர் பிகேஆர் தலைவருடைய காரையும் மீட்பதற்கு உதவுமாறு போலீசாரை அவர் கேட்டுக் கொண்டார்.
“அவர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டனர். என்றாலும் போலீசார் அதிகமாக இருந்ததால் நாங்கள் எங்கள் பொருட்களுடன் வெளியேற முடிந்தது,” எனக் கூறிய நிக் நஸாமி போலீசார் தொழில் ரீதியாக செயல்பட்டதாகப் பாராட்டினார்.