கடந்த மாதம் நிகழ்ந்த மாணவர் கருத்தரங்கு ஒன்றில் Universiti Utara Malaysia (UUM) மாணவி ஒருவரை திட்டிய கருத்தரங்குப் பேச்சாளரான ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் -னைக் கண்டிப்பதில் மேலும் இரண்டு பிஎன் உறுப்புக் கட்சிகள் சேர்ந்து கொண்டுள்ளன.
UUMல் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில் ஷாரிபா சட்டக் கல்வி மாணவியான கேஎஸ் பவானியை நடத்திய முறையை மசீச, கெரக்கான் இளைஞர் பிரிவுகள் கண்டித்தன.
அங்கு ஷாரிபாவின் ‘நாகரீகமற்ற நடத்தை’ தேவை இல்லாதது என மசீச இளைஞர் கல்விப் பிரிவுத் தலைவர் சொங் சின் வூன் கூறினார்.
இன்றைய பல்கலைக்கழக மாணவர்கள் “katak di bawah tempurung (அறியாதவர்கள்)” அல்ல என ஷாரிபாவுக்கு நினைவுபடுத்திய சொங், மாணவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளதாகச் சொன்னார்.
“பல்கலைக்கழக மாணவர்கள் நடப்புப் பிரச்னைகளை நன்கு ஆய்வு செய்கின்றனர். உறுதியான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்வதும் தாங்கள் நம்பும் நிலையில் உறுதியாக நிற்பதும் அவர்கள் உரிமையாகும்.”
“பவானி வாய்மொழியாக மிரட்டப்பட்டு கீழ்த்தரமாக பேசப்பட்ட போதும் துணிச்சலுடன் காணப்பட்டார்,” என அவர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் பேசுவதற்கு பேச்சாளர்களை அழைக்கும் முன்னர் அவர்களைப் பற்றித் தீவிரமாக விசாரிக்குமாறு பொதுப் பல்கலைக்கழகங்களை கெரக்கான் இளைஞர் கல்விப் பிரிவுத் தலைவர் தோர் தியோங் கீ கேட்டுக் கொண்டார்.
பொருத்தமான பேச்சாளர் கிடைக்கவில்லை என்றால் அந்தக் கருத்தரங்கையே நடத்த வேண்டாம் என்றார் அவர்.