UUM: ஷாரிபா கருத்தரங்குடன் எங்களுக்கு தொடர்பு இல்லை

bhavani1Suara Wanita 1Malaysia (SW1M) என்ற அரசு சாரா அமைப்பு மாணவர் கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு மண்டபத்தை மட்டுமே UUM என்ற Universiti Utara Malaysia வழங்கியது.

அந்தக் கருத்தரங்கில் அந்த அமைப்பின் தலைவர் ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் சட்டக் கல்வி மாணவியான கேஎஸ் பவானியை திட்டியது இணையத் தளங்களில் காணொளியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கருத்தரங்கிற்கான இடத்தைக் கொடுத்ததைத் தவிர பல்கலைக்கழகத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என UUM துணைவேந்தர் முகமட் முஸ்தாபா இஷாக் கூறினார்.

அவரது செய்தி பல சீன மொழி நாளேடுகளில் வெளியாகியுள்ளது.

“அந்தக் கருத்தரங்கை பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இணைப்பது மிகவும் நியாயமற்றது,” என முஸ்தாபா சொன்னதாகவும் அந்த ஏடுகள் குறிப்பிட்டன.mustafa

பவானிக்கும் ஷாரிபாவுக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதத்தை காணொளியில் கண்ட பின்னர் பலர் UUM மீது பழி போட்டது குறித்து தாம் மிகவும் வருத்தமடைந்ததாக முஸ்தாபா கூறியதாக ஒரியண்டல் டெய்லி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பவானியின் துணிச்சலுக்கு பாராட்டு

ஷாரிபாவின் அறிக்கை UUM நிலையைப் பிரதிபலிக்கவில்லை என வலியுறுத்திய முஸ்தாபா தமது கருத்துக்களை தெரிவித்த பவானியின் துணிச்சலை பாராட்டினார்.

“உண்மையில் இருவருடைய போக்கும் மிகவும் கடுமையாக இருந்தது. கேள்வி பதில் நேரம் முடிந்த பின்னர் ஷாரிபாவிடம் கேள்வி எழுப்ப பவானி விரும்பி தொடர்ந்தது ஷாரிபாவுக்கு ஆத்திரத்தை மூட்டியிருக்க வேண்டும்,” என முஸ்தாபா சொன்னதாகவும் அந்த சீன மொழி ஏடு கூறியது.

“மாணவர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு பல்கலைக்கழகம் எப்போதும் சுதந்திரம் வழங்குகின்றது,” என்றும் அவர் சொன்னார்.

இன்னொரு நிலவரத்தில் பிரபலமில்லாத அந்த Suara Wanita 1Malaysia (SW1M) அமைப்பின் திட்ட நிர்வாகி எனக் கூறப்பட்ட அஸ்ஹார் என்பவருடன் மலேசியாகினி தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டது.

அந்த விவகாரம் பற்றிக் கருத்துரைக்க மறுத்து விட்ட அவர், விரைவில் நிருபர்கள் சந்திப்புக்கு அந்த அரசு சாரா அமைப்பு ஏற்பாடு செய்யும் என்றார்.

ஷாரிபாவுடன் தொடர்பு கொள்வதற்கு அவருடைய தொலைபேசி எண்ணைத் தருவதற்கும் அஸ்ஹார் மறுத்து விட்டார்.

ஷாரிபா ஜொஹ்ராவுடன் பவானி துணிச்சலுடன் வாதம் செய்வதையும் ஷாரிபா அவரைத் திட்டுவதையும்  காட்டும் 24 நிமிட வீடியோ, யூ டியூப் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டதும் அது வெகு வேகமாக பரவியது. . இணையக் குடிமக்கள் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர். பல நகைச் சுவைகளும் ஷாரிபாவை கிண்டல் செய்யும் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏழு நாட்களுக்கு முன்பு இணையத்தில்  சேர்க்கப்பட்ட அந்த வீடியோவை இன்று பிற்பகல் வரையில் மொத்தம் 532,000 பேர் பார்த்துள்ளனர்.

ஷாரிபாவிடமிருந்து அம்னோ  தலைவர்கள் ஒதுங்கியுள்ள போதிலும் அவர் அம்னோ வட்டாரங்களில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அவர் கிம்மா எனப்படும் மலேசிய இந்தியர் முஸ்லிம் காங்கிரஸில் முன்பு மகளிர் பிரிவுத் துணைத் தலைவியாக ஷாரிபா ஜொஹ்ரா இருந்துள்ளதை அந்தக் கட்சியின் தலைமையகம் தொடர்பு கொள்ளப்பட்ட போது உறுதிப்படுத்தியது.

கிம்மா அம்னோவில் ஒர் இணைக் கட்சியாகும்.