“வாக்குகளுக்காக குடியுரிமை” திட்டம் பற்றி நேற்று சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சாட்சியங்கள் வெளியிடப்படுவதற்குத் தகுதியற்றவை என முக்கிய மலாய் மொழி நாளேடுகள் கருதுவதாகத் தெரிகின்றது.
பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா, சினார் ஹாரியான் ஆகிய மூன்று முக்கிய மலாய் நாளேடுகள் இன்று ஆய்வு செய்யப்பட்ட போது அந்த விசாரணை மீது உத்துசான் மலேசியாவிலும் சினார் ஹரியானிலும் எந்தச் செய்தியும் இல்லை.
அம்னோவுடன் தொடர்புடைய மீடியா பிரிமாவுக்குச் சொந்தமான பெரித்தா ஹரியானில் அந்த விசாரணை குறித்த சிறிய செய்தி இடம் பெற்றுள்ளது. ஆனால் “வாக்குகளுக்காக குடியுரிமை” திட்டம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
பெரித்தா ஹரியானில் எட்டாம் பக்கத்தில் வெளியான அந்தச் செய்தியின் விவரம் வருமாறு: “சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு அடையாளக் கார்டுகளை வழங்கும் பொருட்டு ‘அடையாளக் கார்டு திட்டம்’ என அழைக்கப்பட்ட ரகசிய நடவடிக்கை இருந்தது எனத் தாம் நம்புவதாக ஆர்சிஐ-யில் 9வது சாட்சியான சபா தேசியப் பதிவுத் துறையின் சிறப்புப் பிரிவு துணைத் தலைவர் ரோஸ்லான் அலியாஸ் சொன்னார்.”
“என்னுடைய கருத்துப்படி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசியப் பதிவுத் துறை அதிகாரிகள் கைது
செய்யப்பட்டதால் அது இருந்திருக்க வேண்டும். அடையாளக் கார்டுகளுக்கான எல்லா விண்ணப்பங்களும் சட்டத்திற்கு இணங்க இருந்தன என்பது மட்டும் நிச்சயம்,” என ரோஸ்லான் சொன்னதாகவும் பெரித்தா ஹரியான் செய்தி குறிப்பிட்டது.
பெர்னாமாவும் அதே தொனியில்
தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தகவலும் அது போன்று தான் இருந்தது. ரோஸ்லான் சாட்சியத்தில் அது இன்னொரு பகுதியை வெளியிட்டது. 1979ம் ஆண்டுக்கும் 1996ம் ஆண்டுக்கும் இடையில் வெளியிடப்பட்ட 127,949 அடையாளக் கார்டுகள் கேள்விக்குரியவை என நம்பப்படுவதாக ரோஸ்லான் கூறியதே அந்தப் பகுதியாகும்.
1990களில் நிகழ்ந்த தேர்தல்களில் குடியேற்றக்காரர்கள் வாக்களிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்குமாறும் சபாவில் பிஎன் -னுக்கு நட்புறவான அரசாங்கம் அமைவதற்கு உதவுமாறும் தங்களுக்கு ஆணையிடப்பட்டதாக மற்ற முக்கிய சாட்சிகள் தெரிவித்த விஷயங்களை பெரித்தா ஹரியானும் பெர்னாமாவும் வெளியிடவில்லை.
1994 சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் குடியேற்றக்காரர்கள் வாக்களிப்பதற்கு உதவியாக அவர்களுக்கு அடையாளக் கார்டு ரசீதுகளை வழங்குமாறு அப்போதைய உள்துறை துணை அமைச்சர் மெகாட் ஜுனிட் மெகாட் அயூப் உத்தரவிட்டதாக முன்னாள் சபா தேசியப் பதிவுத் துறை இயக்குநர் ராம்லி கமாருதின் நேற்று சாட்சியமளித்திருந்தார்.
அந்த ரகசிய நடவடிக்கையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் அரசியல் செயலாளர் அப்துல் அஜிஸ் சம்சுதினுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் ஆர்சிஐ-யிடம் தெரிவிக்கப்பட்டது.
மெகாட் ஜுனிட் 2008ம் ஆண்டு காலமானார். 2004 முதல் 2008 வரை அப்துல் அஜிஸ் கூட்டரசு அமைச்சராக முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் கீழ் பணியாற்றினார்.
அப்துல் அஜிஸ், அப்துல்லாவின் இளைய சகோதரர் இப்ராஹிம் அகமட் படாவி முக்கியப் பங்குதாரராகவும் நிர்வாகத் தலைவராகவும் இருக்கும் பிராஹிம் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் துணை நிறுவனமான அட்மூடா சென் பெர்ஹாட்டுக்கு இப்போது தலைவராக இருக்கிறார்.
அந்த பொது விசாரணை பற்றிய செய்திகளை ஆங்கில மொழி ஏடுகளான நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸும் தி ஸ்டாரும் வெளியிட்டுள்ளன. ஆனால் சன் ஏதுவும் வெளியிடவில்லை.
தி ஸ்டார் 30வது பக்கத்தில் அந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் மெகாட் ஜுனிட் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆனால் அப்துல் அஜிஸ் பற்றி ஒன்றுமில்லை. நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் 13வது பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் அந்த இருவருடைய பெயரும் இல்லை.
1994ம் ஆண்டு மாநிலத் தேர்தலில் பார்ட்டி பெர்சத்து சபா அரசாங்கத்தை வீழ்த்துவதே அந்த மாநிலத்தில் பூமிபுத்ரா முஸ்லிம் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கப்படுவதின் நோக்கம் என தெரிவிக்கப்பட்ட சாட்சியம் பற்றி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் குறிப்பிடவே இல்லை.
அதற்கு நேர்மாறாக சின் சியூ டெய்லி, சைனா பிரஸ், ஒரியண்டல் டெய்லி நியூஸ், நன்யாங் சியாங் பாவ் ஆகிய முக்கிய சீன மொழி ஏடுகள் சபா ஆர்சிஐ விசாரணை பற்றி விரிவாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
மெகாட் ஜுனிட்டையும் அப்துல் அஜிஸையும் தொடர்புபடுத்தி சாட்சிகள் தெரிவித்த ஆதாரங்களையும் அவை தங்கள் செய்திகளில் இடம் பெறச் செய்திருந்தன.