பவானி: சர்ச்சைக்குரிய கருத்தரங்குக்குச் செல்லுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்

1bawaniயுனிவர்சிடி உத்தாரா மலேசியா (யுயுஎம்) தங்கு விடுதிகள் சில அங்கு தங்கியிருந்த மாணவர்களை சுவாரா வனிதா 1மலேசியா (SW1M)-வின் கருத்தரங்குக்குக் கண்டிப்பாக செல்ல வேண்டும், இல்லையென்றால் தங்குவிடுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்திருந்ததாகக் கூறுகிறார் மாணவி கே.எஸ்.பவானி.

அப்படி இருக்க,  பல்கலைக்கழகம் கடந்த மாதம் நடந்த கருத்தரங்குக்கு மண்டபம் மட்டுமே கொடுத்தோம் மற்றபடி அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறுவது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் சொன்னார்.

1bawani1“பல்கலைக்கழகம் தனக்குத் தொடர்பில்லை என்று கூறியுள்ளது. ஆனால், பல மாணவர்கள் அந்நிகழ்வில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டனர்… அது பல்கலைக்கழக நிகழ்வு இல்லையென்றால் எதற்காகக் கட்டாயப்படுத்த வேண்டும்?”, என்று பவானி மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலின்போது வினவினார்.

அப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டவர்களில் புரோட்டோன் மாணவர் தங்குவிடுதி மாணவர்களும் அடங்குவர் என்றாரவர்.

ஆனால் தாம் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று கூறிய பவானி, சுய விருப்பத்தின்பேரிலேயே அந்நிகழ்வுக்குச் சென்றதாக தெரிவித்தார். சுமார் 2000 மாணவர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.

‘அரசியலில் பெண்கள்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கருத்தரங்கம் டிசம்பர் 8-இல் காலை மணி 10-இலிருந்து பிற்பகல் ஒன்று வரை நடந்தது.

1bawani shariஅந்நிகழ்வைக் காண்பிக்கும் 24-நிமிட காணொளி ஒன்று இணையத்தில் இடம்பெற்றதை அடுத்து அது மிக பிரபலமானது. அதைக் கண்ட இணையப் பயனர்கள் ஷரிபா (வலம்)வைக் கண்டித்தனர். அவருக்கு ‘Kak Listen’ (சொல்வதைக் கேள் அக்கா) என்ற பெயரையும் சூட்டிக் கேலி செய்தனர்.

அந்நிகழ்வு பரவலான கவனத்தைப் பெற்றிருப்பதை அடுத்து உயர் கல்விக்கூடங்களில் அது போன்ற ‘மூளையைச் சலவை செய்யும் நிகழ்வுகளுக்கு’முடிவுகட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக பவானி கூறினார்.

அந்நிகழ்வை நினைவுக்குக் கொண்டுவந்த பவானி தொடக்கத்திலிருந்தே அந்நிகழ்வு நடத்தப்பட்ட விதத்தில் வெறுப்படைந்ததாகக் கூறினார்.

“தலைப்பு ஒன்று. ஆனால், அங்கு பேசப்பட்டது வேறொன்று. பலவகையான அபத்தங்கள் எடுத்துக்கூறப்பட்டன. எல்லாமே  ஒரு தரப்பைக் கண்டிப்பதாகவே இருந்தது.

“மூளையைச் சலவை செய்யும் முயற்சிபோல இருந்தது”, என்றுரைத்த அவர் அதனால்தான் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்ததாகக் கூறினார்.

ஆனால், அவரைப் பேச விடாதபடி தடுத்த ஷரிபா, “நான் சொல்வதைக் கேள்”, “நான் சொல்வதைக் கேள்”என்பதை சுமார் பத்துத் தடவை கூறி பவானி பேசிக்கொண்டிருந்த ஒலிவாங்கியையும் பறித்தார். அதன்பின்னர் ஷரிபா அவரைச் சரமாரியாக திட்டத் தொடங்கினார்.

“நான் பேசி முடித்து விடுகிறேன் என்று கெஞ்சினேன். ஆனால், அவர் குரலை உயர்த்திக்கொண்டே போனார்”.

அச்சம்பவத்தைக் கண்ணுற்ற மாணவர்களில் ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகப் பேசினர். இன்னொரு தரப்பினர் அவர் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதாக நினைத்தனர், இன்னுமொரு தரப்பினர் இருவர்மீதும் குற்றம் இருப்பதாகக் கருதினர்.

சிலர், பவானியைப் போலவே அக்கருத்தரங்கம் மூளையைச் சலவை செய்யும் நிகழ்வு என்ற முடிவில்தான் இருந்தனர். ஆனால், அதை வெளியில் சொல்லவில்லை.

“இதுதான் பிரச்னை. (மாணவர்கள்) அதிகாரத்துக்கு அஞ்சுகிறார்கள்; தங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பயப்படுகிறார்கள்”, என்றாரவர்.

“அங்கு பேசாதவர்கள் முகநூலில் தங்கள் கருத்துகளைச் சொல்லியுள்ளனர். ஆக, அவர்களுக்குத் துணிச்சல் இருக்கிறது. ஆனால், ஏதோ ஒன்று அதை அடக்கி வைக்கிறது”, என்றார்.

முதலில் தம்மைக் கண்டித்தவர்கள்கூட காணொளியைப் பார்த்த பின்னர் மன்னிப்பு கேட்டனர் என்று பவானி குறிப்பிட்டார்.

“மன்னித்துக்கொள். வீடியோவைப் பார்த்துதான் உண்மையில் நடந்தைத் தெரிந்து கொண்டோம் என்றனர்”.

காணொளி கண்ட அவரின் நண்பர்கள் பலர் அழைத்து ஆதரவு தெரிவித்தனர். பாராட்டினர்.

1bawani saiஎதிர்பாராத ஓர் அழைப்பும் வந்தது. உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா(வலம்) அவரை அழைத்து ஊக்கமொழி கூறியதை அவர் எதிர்பார்க்கவில்லை. பின்னர் அவரை நேரிலும் சந்தித்தார் பவானி.

“சைபுடினைச் சந்தித்ததை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர் திறந்த மனத்துடன் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறார். அமைச்சர் ஒருவர் என்னை அழைப்பார் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை….எனக்கு ஊக்கம்தரும் வகையில் பேசினார்.

“மாணவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு இடமளிக்க வேண்டும். கருத்துரைக்கும் உரிமை வேண்டும் என்றார். அவர் அப்படிச் சொன்னதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது”,என்றார்.

இப்படி பலரும் ஆக்கமும் ஊக்கமும் தந்து பாராட்டியபோதும் தாம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை என்று அடக்கத்துடன் கூறுகிறார் பவானி. வேறு எத்தனையோ பேர் தம்மைக் காட்டிலும் நாட்டுக்கு நிறைய செய்துள்ளனர் என்றார்.