முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு அம்னோ, மசீச, மஇகா, ஆட்சியாளர் மாநாடு ஆகிய தரப்புக்கள் பதில் அளிக்க வேண்டும். ஏனெனில் அந்த அறிக்கை இந்த நாட்டின் மூன்று முக்கிய இனங்களுக்கு இடையிலான சமூக ஒப்பந்தத்தையே கீழறுப்புச் செய்கிறது என அரசமைப்பு சட்ட நிபுணர் அப்துல் அஜிஸ் பேரி கூறுகிறார்.
மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு மில்லியன் குடியேற்றக்காரர்களுக்கு முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் குடியுரிமைகளை வழங்கியது மீது அரச விசார ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என மகாதீர் யோசனை சொல்வது, அவர்கள் சட்ட விரோதமாக குடியுரிமையைப் பெற்றார்கள் எனச் சொல்வதற்கு ஒப்பாகும் என்றார் அவர்.
“மகாதீர் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சியில் அவர் எப்படியோ அம்னோவையே தாக்கியுள்ளது தான் இதில் வேடிக்கையாகும்.”
“துங்குவும் அதே குற்றத்தைச் செய்துள்ளதாக அவர் சொன்ன போது அவர் உண்மையில் தங்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு ஈடாக சீனர்களும் இந்தியர்களும் மலாய் சிறப்பு சலுகை நிலையை ஏற்றுக் கொண்டதையும் உள்ளடக்கிய சமூக ஒப்பந்தம் என்ற கருத்தையே வேரறுத்துள்ளார்.”
ஆகவே அம்னோ, மசீச, மஇகா ஆகியவை அமைதியாக இருக்கக் கூடாது. அவை தங்கள் நிலையை வெளிப்படுத்த வேண்டும். சீனர்களும் இந்தியர்களும் நேர்மையற்ற சட்ட விரோத வழிகளில் தங்கள் குடியுரிமைகளைப் பெற்றனர் என மகாதீர் உண்மையில் சொல்லியிருக்கிறார்.
துங்கு செய்ததற்கும் மகாதீர் செய்துள்ளதாக கூறப்படுவதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதை அந்த முன்னாள் சட்டத் துறைப் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
மகாதீர் சொல்வது போல ஆர்சிஐ-யை அமைக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார். ஏனெனில் துங்கு, ரெய்ட் ஆணையத்தின் பரிந்துரைகளையே துங்கு பின்பற்றினார். அவை பின்னர் கூட்டரசு அரசமைப்பின் மூன்றாவது பகுதியில் இணைத்துக் கொள்ளப்பட்டன என அவர் விளக்கினார்.
அதே வேளையில் “துங்குவைப் போல் அல்லாமல் 1994ல் மகாதீர் செய்தது குற்றமாக, அதுவும் நாட்டுக்கு எதிராக செய்யப்பட்ட துரோகமாகத் தெரிகிறது,” என்றார் அவர்.
“ரெய்ட் ஆணையத்தின் பரிந்துரைகளை விளக்குவதற்கு அரசமைப்பில் பல நடைமுறைகளும் பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அவற்றை மேற்பார்வை செய்யும் பணி ஆட்சியாளர் மாநாட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.”
“அவை அந்த விஷயம் மீதான தங்கள் மௌனத்தை -அரசர் ஆட்சி முறை, இஸ்லாம், மலாய்க்காரர்களுடைய சிறப்பு நிலை ஆகியவை சம்பந்தப்பட்ட விஷயங்களை அம்னோ திரிக்க முயன்ற 2009ல் ஆட்சியாளர்கள் செய்ததைப் போல கலைக்க வேண்டும்,” என்றும் அப்துல் அஜிஸ் கேட்டுக் கொண்டார்.