ஆர்சி-இடம் உண்மை உரைக்க தயாரா? அன்வாருக்கு அம்னோ சவால்

1addசாபா குடியேற்றக்காரர்கள்மீது  விசாரணை நடத்தும்  அரச ஆணையத்திடம் (ஆர்சிஐ) கள்ளக் குடியேறிகள் பற்றிய உண்மையைச் சொல்லும் துணிச்சல் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு உண்டா என்று சாபா அம்னோ தொடர்புக்குழு துணைத் தலைவர் சாலே சைட் குருவாக் சவால் விடுத்துள்ளார்.

அதைச் சொல்லும்  கடப்பாடு அன்வாருக்கு உண்டு என்பதை வலியுறுத்திய அவர், குறிப்பிட்ட காலத்தில் அவர் துணைப் பிரதமராக இருந்தவர் என்ற முறையில், “சாபாவில் நடப்பதை அறிந்தே இருப்பார்”, என்றார்.

“இவ்விவகாரத்தில் அன்வாரால் சிறிது ஒளி பாய்ச்ச முடியும்……எனவே ஆர்சிஐ-இடம் உண்மையைச் சொல்லுங்கள்.

“அவர் அரசியல் ஆடக்கூடாது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பாருங்கள். உண்மையைத் தெரிதுகொள்வதில் நாட்டம் உள்ளவராக இருக்கிறார். பிரச்னையின் வேரைக் கண்டறிய ஆர்சிஐ-யை அமைக்க இணங்கினார்.

“முன்னாள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) கைதிகள் சிலர் சொன்னதை வைத்து ஒரு முடிவுக்கு வந்து சில தரப்பினரைக் குற்றம் சொல்லக்கூடாது.

1anwar salleh“ஆர்சிஐ அதன் விசாரணை முடியும்வரை காத்திருக்க வேண்டும்…..நமக்கு ஒரு நிரந்தர தீர்வு தேவை”, என இன்று கோத்தா பெலுட் அருகே, எஸ்கே செம்பிறையில் மக்கள்-சதிப்பு-நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

ஆர்சிஐ அமைத்த நஜிப்பின் துணிவை மக்கள் பாராட்ட வேண்டும் என்று சாலே குறிப்பிட்டார்.

“ஆர்சிஐ அதன் பணியை முடித்ததும் அரசாங்கம் அதன் அறிக்கையை ஆராய்ந்து தக்க நடவடிக்கையை எடுத்து அவ்விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காணும்.

“முறையான வழியில் குடியுரிமை பெற்றவர்களைத் தண்டிக்கக்கூடாது. ஆனால், சட்டவிரோதமாகவும் ஐயத்துக்குரிய வழிமுறைகளிலும் குடியுரிமை பெற்றவர்களிடமிருந்து அதைப் பறிக்க வேண்டும். அதுதான் நியாயம்”.

சட்டவிரோத குடியேறிகள் பிரச்னைக்கு நஜிப் தலைமையிலான அரசு தீர்வு காணும் என்று குறிப்பிட்ட சாலே, அதுவரை பொறுமையாக இருக்குமாறு சாபா மக்களைக் கேட்டுக்கொண்டார்.

-Bernama

TAGS: