பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அதிக விளம்பரம் கொடுக்கப்பட்ட தமது “சீர்திருத்த” முயற்சிகளுக்கு 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முதலிடம் கொடுக்கத் தவறி விட்டதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் அரசாங்கக் கடன்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடியிருப்பது குறித்தும் புவா கவலை தெரிவித்தார்.
புதிய பொருளாதார வடிவம், அரசாங்க உருமாற்றத் திட்டம், பொருளாதார உருமாற்றத் திட்டம் போன்ற தமது முக்கியக் கொள்கை வடிவங்கள் உட்பட பல்வேறு சீர்திதிருத்த வாக்குறுதிகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் முதலிடம் கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதாக அவர் சொன்னார்.
“கடந்த நிதி ஆண்டு சிறிதளவு மாறுபட்டதாக இருக்கிறதே தவிர வரவு செலவுத் திட்டத்தில் புதிதாக ஒன்றுமில்லை.”
மலேசியர்கள் நாட்டு நிதி நிலைமை சிறிது சிறிதாக கடுமையாகக் கொண்டிருப்பதை உணரவில்லை. நாம் கிரீஸ் அளவுக்கு நெருக்கடியை இன்னும் எதிர்நோக்கவில்லை என்றாலும் அந்த நிலை ஏற்படுவதைத் தவிர்க்க 2012 வரவு செலவுத் திட்டம் எதனையும் செய்யவில்லை. அதனால் மலேசியப் பொருளாதாரம் நெருக்கடி நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது,” என புவா குறிப்பிட்டார்.
இதில் கவலை அளிக்கும் விஷயம் என்னவெனில் 2004ம் ஆண்டு 242 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த கூட்டரசு அரசாங்கக் கடன் சுமை 2011ல் 456 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்து விட்டதாகும் என அவர் சொன்னார்.
“அந்த உயர்வு கடந்த ஏழு ஆண்டுகளில் கடன் அளவு 88.4 விழுக்காடு அதிகரித்துள்ளதைக் குறிக்கிறது.அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது மேலும் 25.6 விழுக்காடு அல்லது 100 பில்லியன் ரிங்கிட் அதிகரிக்கக் கூடும்.”
“கடன் சுமை அதிகரிப்பது நமது வரவு செலவுத் திட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு அதற்கு நாம் செலுத்த வேண்டிய வட்டித் தொகை 20.5 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கும்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அது பாதியாக இருந்தது,” என புவா சொன்னார்.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் கூட்டரசு அரசாங்கத்தின் கடனுக்கும் இடையிலான விகிதம் 53.8 விழுக்காடாக இருக்கிறது. ஸ்பெயினில் அந்த விகிதம் 64 விழுக்காடாகவும் அயர்லாந்தில் 67 விழுக்காடாகவும் உள்ளது என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரியான புவா சொன்னார்.
“ஸ்பெயினும் அயர்லாந்தும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன”, எனக் குறிப்பிட்ட அவர், 53 பில்லியன் ரிங்கிட் பெறும் கிள்ளான் பள்ளத்தாக்கு எம்ஆர்டி போன்ற பெரிய அளவிலான திட்டங்களைத் தொடங்கியிருப்பதால் அடுத்த சில ஆண்டுகளில் மலேசியாவின் கடன் சுமை மோசமடையும் என்றார்.