‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது பற்றி விவாதிக்க மன்றம் ஒன்றை அமைக்கலாம் என பேராசிரியர் ( ஒய்வு பெற்ற ) ஷாட் சலீம் பாருக்கி யோசனை கூறியிருக்கிறார்.
“இந்த சிக்கலான சூழ்நிலைக்கு எளிதான தீர்வு இல்லை. ஆனால் எல்லாத் தரப்புக்களும் பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருந்தால் நிச்சயம் தீர்வு காண முடியும்,” என்றார் அவர்.
மாரா தொழில் நுட்பப் பல்கலைக்கழக சட்ட ஆலோசகருமான அவர், கூச்சிங்கில் உள்ள அந்த பல்கலைக்கழக வளாகத்தில் ‘மலேசியாவில் கூட்டரசு மாநில உறவுகள்’ என்னும் தலைப்பில் உரையாற்றிய பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவ்வாறு கூறினார்.
சரவாக்கில் முஸ்லிம் அல்லாதார், ‘அலாஹ்’ என்ற சொல்லை மிக நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் அதனால் புண்படவில்லை எனக் கூறிய அவர் எப்படி ஒன்றாக வாழ்வது என்பது பற்றி தீவகற்ப மலேசியர்கள் கிழக்கு மலேசியர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் எனச் சொன்னார்.
“சமூக அடிப்படையில் பார்த்தால் சபா மக்களும் சரவாக் மக்களும் தீவகற்ப மலேசியர்களைக் காட்டிலும் எவ்வளவோ முன்னேறியுள்ளனர்.”
“அறிவாற்றல் அடிப்படையில் பார்த்தால் மற்றவர் இறைவனை எப்படிச் சொல்ல வேண்டும் என ஒருவர் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.”
“நமது பேச்சுச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் ஆகியவற்றையே அது மீறுகின்றது. தங்களை சமய நிபுணர்கள் என அழைத்துக் கொள்ளும் பலர் ‘அல்லாஹ்’ என்ற சொல் இஸ்லாத்துக்கு மட்டுமே உரியது என்றும் அதனை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்கின்றனர்.”
“ஆனால் அந்த வாதத்திற்கு ஆதாரமில்லை என நான் மரியாதையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கிறிஸ்துவ அரபுக்கள் உட்பட அரபு உலகில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.”
“அரபு நாடுகளில் ‘Bismillah’, ‘Alhamdulillah’ போன்ற சொற்களை கிறிஸ்துவ அரபுக்களும் பயன்படுத்தி வருகின்றனர். காரணம் அவை அரபு மொழியில் ஒரு பகுதியாகும்,” என்றார் அவர்.
இஸ்லாத்துக்கு மட்டும் உரியதல்ல
பாருக்கி இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்: ‘அல்லாஹ்’ என்ற சொல் இஸ்லாத்துக்கு மட்டுமே உரியது என்ற வாதம் உண்மையில் வரலாற்றை அறியாத நிலையையே பிரதிபலிக்கிறது. கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் முஸ்லிம்கள் தவறாக வழி நடத்தப்பட்டு விடுவர் என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.’
“முஸ்லிம்கள் ஏமாறக் கூடியவர்கள் அல்ல, அறிவாற்றல் இல்லாதவர்களும் அல்ல,” எனக் குறிப்பிட்ட அவர் முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ் ‘ எனச் சொல்வதால் மற்ற சமயத்திற்கு முஸ்லிம்கள் எளிதாக மாறி விட மாட்டார்கள் என்றார்.
அத்தகைய வாதங்களை முன் வைக்கின்றவர்களுக்கு உண்மையில் இஸ்லாமியப் போதனைகள் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் மிகவும் குறைந்த ஞானத்தையே பெற்றுள்ளனர் என்றும் பாருக்கி குறிப்பிட்டார்.
‘அல்லாஹ்’ என்ற சொல்லைக் கொண்ட பைபிள் பிரதிகளை எரிக்குமாறு பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்துள்ள அறைகூவல் பற்றிக் குறிப்பிட்ட அவர், பல இன சமுதாயத்தில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் வலுப்படுவதற்கு அரும்பாடுபட்டுள்ள மலேசியா போன்ற ஒரு நாட்டில் அத்தகைய தீவிர நடவடிக்கைகளுக்கு இடமில்லை என்றும் சொன்னார்.
“அத்தகைய தீவிரவாதத்தை கண்டிக்க வேண்டும். நாடு அதற்குச் செவிசாய்க்கக் கூடாது. மாறாக அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த தீர்வுகளைக் காண முயல வேண்டும்.”
இந்த உலகில் சமயங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையிலும் வட்டாரங்களுக்கு இடையிலும் மொழிகளுக்கு இடையிலும் நிலவும் நல்லுறவுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டாக மலேசியா கடந்த 55 ஆண்டுகளாக திகழ்ந்து வருகின்றது.”