இன்று காலை பினாங்கின் தேசிய பதிவுத் துறை(என்ஆர்டி)க்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்த சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்போர் அதன் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதை போலீசார் தடுத்ததை அடுத்து அங்கு குழப்பம் மூண்டது.
முன்னதாக, சிவப்பு அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 30பேரும் அவர்களின் குடும்பத்தாரும் பக்காத்தான் ரக்யாட் சட்டமன்ற உறுப்பினர் சிலரும் ஜாலான் லாருட்டில் ஒன்றுதிரண்டு அங்கிருந்து என்ஆர்டி அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
அவர்கள் என்ஆர்டி அலுவலகத்தை அடைந்ததும் அலுவலகத்தின் உள்ளே செல்வதை போலீஸ் தடுத்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர், “போலீஸ் எங்களுக்கு எதிராக வேலை செய்கிறது”, என்று கூச்சலிட்டார்.
பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் தலைமையில் சென்றிருந்த அக்கூட்டத்தில், நீல அடையாள அட்டை பெறத்தவறிய மூத்த குடிமக்கள், சிறுவர்கள் முதலியோர் உள்ளிட்டிருந்தனர்.
அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக சுரேந்திரன் கூறினார்.
கைதாவீர்கள் என்று மிரட்டல்
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்யப்போவதாக போலீஸ் மிரட்டியதாக உரிமைகளுக்குப் போராடும் வழக்குரைஞர்கள் என்னும் என்ஜிஓவைப் பிரதிநிதித்த லத்தீபா கோயா கூறினார்.
பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் சிம் ட்சே ட்சின் (பந்தாய் ஜெரெஜாக்), ஜேசன் ஒங் (கெபூன் பூங்கா), இங் வெய் ஏய்க் (கொம்டார்) ஆகியோரும் பக்காத்தான் ஆதரவாளர்கள் பலரும் அங்கு இருந்தனர்.
பச்சைநிற அடையாள அட்டை வைத்திருந்த பலரும்கூட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
பக்காத்தான் தலைவர்கள் போலீசுடன் பேச்சு நடத்திய பின்னர் அவர்கள் என்ஆர்டி கட்டிடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள், என்ஆர்டி அலுவலகம் நோக்கி அணிவகுத்துச் சென்றபோது போலீசாரும் மாநில தன்னார்வ காவல் பிரிவினரும் வழிநெடுகிலும் போக்குவரத்தை வழிநடத்தும் பணியை மேற்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் எதுவும் ஏற்படவில்லை.
தங்கள் விண்ணப்பங்களை என்ஆர்டி உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்பதுதான் அக்கூட்டத்தாரின் விருப்பமாகும் என்று சுரேந்திரன் (வலம்) கூறினார்.
“அவர்கள் சாதாரண குடிமக்கள். அவர்களுக்கு ஏன் நீலநிற அடையாள அட்டை மறுக்கப்படுகிறது?”, என்றவர் வினவினார்.
நாடற்ற மக்களிடமிருந்து பிகேஆர் அலுவலகங்கள் நிறைய புகார்களைப் பெற்றதன் விளைவாகத்தான் அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், சாபாவில் குடியேற்றக்காரர்கள் மீது நடக்கும் அரச விசாரணை ஆணையத்தில் இந்தோனேசியர்கள், பிலிப்பினோக்கள், பாகிஸ்தானியர் முதலிய வெளிநாட்டவருக்கு உடனடி குடியுரிமை கிடைத்ததாக வெளிவந்த தகவல்களும் அவர்களுக்கு ஆத்திரமூட்டின.
அந்நியர்களுக்கு ‘உடனடி’ குடியுரிமை கிடைக்கிறது. ஆனால் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களின் குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிக்கவே பல ஆண்டுகள் பிடிக்கிறது என்றாரவர்.