நாட்டு நிர்வாகத்தில் ஏற்படும் எந்தத் தீவிரமான மாற்றமும் கடுமையான பொருளாதாரக் குழப்பத்தை விளைவித்து விடும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார்.
“தீவிரமான மாற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாது போனால் நாணய மதிப்பு வீழ்ச்சி அடையும். பண வீக்கம் அதிகரிக்கும். சுற்றுலாத் தொழில் முடங்கி விடும். நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதமும் அளிக்க முடியாது,” என நஜிப் மலேசியாவை நேரடியாக பெயர் குறிப்பிடாமல் சொன்னார்.
கெடா அலோர் ஸ்டாருக்கு ஒரு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அவ்வாறு சொன்னதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் வருமானமும் மக்கள் வருமானமும் பெருகுவதற்குப் பல்வேறு துறைகளில் நாட்டின் வளர்ச்சியை பிஎன் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
“நாம் திட்டமிட்டு முறையாக மாற்றங்களைக் கொண்டு வர முடியும். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது.”
“பெரிய பெரிய முதலீடுகள் இருக்கும் போது அரசாங்க வருமானம் கூடும். நாம் உபரி நிதிகளை மக்களுடைய நன்மைக்குப் பயன்படுத்த முடியும்.”
“நாங்கள் BR1M (ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை), பள்ளிப் பிள்ளைகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உதவித் தொகை, ஆகியவற்றை நாங்கள் கொடுக்கிறோம். இப்போதைக்கு அவை மட்டுமே. மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கினால் எதிர்காலத்தில் நாங்கள் இன்னும் நிறையச் செய்ய முடியும்,” என நஜிப் எதிர்வரும் பொதுத் தேர்தலைக் குறிப்பிட்டுப் பேசினார்.
நாட்டை நிர்வாகம் செய்வதில் பிஎன் அடைந்துள்ள வெற்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அண்மையில் தாம் பாலஸ்தீனத்தில் உள்ள காசாவுக்கு மேற்கொண்ட பயணத்தை எடுத்துக்காட்டாக காட்டினார்.
அங்கு தமக்கு ‘திறந்த கரங்களுடன்’ வரவேற்பு அளிக்கப்பட்டதாகக் கூறிய நஜிப், பிஎன் ஆட்சியில் மலேசியா அடைந்துள்ள வெற்றியை அவர்கள் (பாலஸ்தீனர்கள்) அறிந்துள்ளதே அதற்குக் காரணம் என்றார்.