நிக் அஜிஸ்-கர்பால் சந்திப்பில் ‘அல்லாஹ்’ பிரச்னை விவாதிக்கப்படவில்லை

karpal‘அல்லாஹ்’ பிரச்னை மீது பாஸ் Syura மன்ற செய்த முடிவை டிஏபி தலைமைத்துவம் உட்பட முஸ்லிம் அல்லாதார் நல்ல முறையில் எடுத்துக் கொண்டுள்ளதாகக் கூறுவது தவறு என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார்.

அந்த வகையில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்த அறிக்கை குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கர்பால் இன்று ஜார்ஜ் டவுனில் நிருபர்களிடம் கூறினார்.

முஸ்லிம் அல்லாதார் தங்களது வேத நூல்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது மீதான விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் கடந்த திங்கட்கிழமை கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் பினாங்கில் கர்பாலைச் சந்தித்த போது அது பற்றி அளித்த விளக்கத்தை டிஏபி தலைமைத்துவம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஹாடியை மேற்கோள் காட்டி வெளியான செய்தி பற்றி அவர் கருத்துரைத்தார்.

திங்கட்கிழமை அதிகாரப்பற்றற்ற முறையில் நிக் அஜிஸைச் சந்தித்த போது ‘அல்லாஹ்’ பிரச்னை பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை என கர்பால் வலியுறுத்தினார்.

Syura மன்றம் தனது நிலையில் உறுதியாக நிற்கக் கூடாது என வலியுறுத்திய அவர், அது டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகியவை இணைந்துள்ள பக்காத்தான் ராக்யாட் எடுத்த முடிவுக்கு முரணாக இருப்பதாகச் சொன்னார்.

டிஏபி பாஸ் கட்சியின் உள் விவகாரங்களில் டிஏபி தலையிடவில்லை என்றும் முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என பிகேஆர் மூத்த தலைவருமான எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், ஹாடி ஆகியோர் ஒப்புக் கொண்டு எடுத்த முடிவை நிலை நிறுத்தவே டிஏபி விரும்புகின்றது என்றும் கர்பால் தெரிவித்தார்.

பெர்னாமா

 

TAGS: