மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டும் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சிலாங்கூர் மாநில பக்கத்தான் அரசாங்கம் தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டுவதற்கு ஈஜோக்கில் 8 ஏக்கர் நிலத்தையும் ரிம 5 மில்லியனையும் ஒதுக்கி இருக்கிறது. தொடக்கப் பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் இரு ஆண்டுகளில் அத்தங்கும் விடுதி தயாராகி விடும் என்று அறிவித்து அத்திட்டத்தின் அறிமுக விழாவை மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இன்று காலை மணி 11.15 க்கு தொடக்கி வைத்தார்.
புதிய சூழ்நிலையை உருவாக்க தங்கும் விடுதி அவசியம்
சிலாங்கூர் மாநில அரசின் தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழா பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றது.
இந்திய இளைஞர்கள் எதிர்காலத்தில் முன்னேற்றம் காண்பதற்கான ஒரே வழி கல்விதான். அக்கல்வியை அவர்கள் சிறப்பாக, முறையாக கற்பதற்கு அவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வசதியற்ற தோட்டப்புற ஏழை இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையை முற்றிலும் மாற்றி அமைப்பதற்கு இன்றியமையாதது அவர்களுக்காக தங்கும் விடுதி அமைப்பதாகும் என்று அந்த அறிமுக விழாவில் உரையாற்றிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
இந்த தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழா ஒரு நடன நிகழ்ச்சியுடன் தொடங்கிற்று.
இந்நிகழ்ச்சியில் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் நசீர் முகமட், மனோகரன் மலையாளம், ரவி, செனட்டர்கள் சைட் சரீர், சந்திர மோகன், முன்னாள் செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி PIBGபு தலைவர் கா. உதயசூரியன், சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல். சேகரன் ஆகியோரும் அங்கிருந்தனர்.
தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டும் திட்டம் 2008 ஆண்டிலேயே விவாதிக்கப்பட்டதாகவும், இதற்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கூறிய சேவியர், “இத்திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டிலிருந்து பாரம் 5 வரையில் இந்திய மாணவர்கள் தங்கி படிப்பதற்கான தங்கு விடுதி கட்டி முறையாகப் பராமறிப்பது கடினமான காரியம். ஆனால், அத்திட்டத்தைத் தொடங்கி விட்டோம். அதனை உங்கள் ஆதரவுடன் செயல்படுத்துவோம். இந்திய இளைஞர்களின் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது”, என்று பலத்த கைத்தட்டலுக்கிடையில் அவர் கூறினார்.
கல்விக்கு முன்னுரிமையளிப்பதில் 50 ஆண்டுகாலம் விரையமாக்கப்பட்டு விட்டது என்பதைச் சுட்டிக் காட்டிய சேவியர், எப்படிப்பட்ட கல்வி எவ்வாறான சூழ்நிலையில் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் கண்டிப்பாக தீர்மானிக்க வேண்டும். அதுவும் இன்றே செய்ய வேண்டும் என்று அவர் வலுயுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில பக்கத்தான் அரசு ஓர் ஆக்ககரமான போட்டி சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. “நாம் ஒரு மில்லியன் ரிங்கிட் ஒதுக்குகிறோம் என்று அறிவித்தால், பாரிசான் ரிம5 மில்லியன் ஒதுக்குவதாக அறிவிக்கிறது. ஏன் என்பதை உங்களால் ஊகிக்க முடியும்”, என்றாரவர்.
பொங்கல் விழா நடத்த பாரிசான் ரிம50 மில்லியன் ஒதுக்குகிறது. அந்நிதியைக் கொண்டு தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு பத்து தங்கும் விடுதிகள் கட்டலாம்!
திருட்டுத்தனமாக வரவில்லை
இன்று வரலாறு படைக்கும் நாள். சிலாங்கூரில் தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டுமான அறிமுக நாள். அது மட்டுமா… இன்று பொங்கல் படைக்கும் நஜிப் ஐந்து மாநிலங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கவும் கூடும்”, என்று அங்கிருந்தவர்களின் ஆரவாரத்திற்கிடையில் கூறினார்.
இந்தியர்கள், குறிப்பாக தென்இந்திய தொழிலாளர்கள், இந்நாட்டில் கொட்டிக்கிடந்த செல்வத்தைக் கொள்ளையடிக்க திருட்டுத்தனமான இந்நாட்டிற்கு வரவில்லை. அவர்கள் சட்டப்பூர்வமாக இங்கு கொண்டு வரப்பட்டு வெறும் காடாக இருந்த இந்த நாட்டை தங்களுடைய இரத்தத்தைக் கொட்டி நாடாக்கினார்கள் என்று தோட்டங்களில் வேலை செய்வதற்காக மில்லியன்கணக்கில் கொண்டு வரப்பட்ட இந்திய தொழிலாளர்களின் பின்னணியை எடுத்துரைத்து தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழாவின் இன்னொரு அங்கமான கருத்தரங்கை தொடக்கி வைத்தார் பால் சின்னப்பன்.
இக்கருத்தரங்கு முன்னாள் செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன் தோட்டப் பாட்டாளிகளில் போராட்டங்களையும், அவர்கள் அனுபவித்த துன்பங்களையும், அரசாங்கத்தின் தொழிலாளர்களுக்கு எதிரான போக்கையும், போலீசாரின் அடாவடிதனத்தையும் பட்டியலிட்டார்.
போராட்டவாதிகள்
150 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டப்பாட்டாளிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன்றும் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் பல்வேறு கோணங்களில், பல்வேறு அமைப்புகள் மூலமாக போராட்டம் நடத்திய போராட்டவாதிகள் இன்று இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். போராட்டவாதிகளைக் கௌரவிக்கும் ஒரே அரசு பக்கத்தான் அரசு மட்டுமே என்று 10 போராட்டவாதிகளை அறிமுகப்படித்தியபோது கூறப்பட்டது.
தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழாவில் கௌரவிக்கப்பட்ட பத்து போராட்டவாதிகள்:
1. ஜானகி இராமன்
2. டாக்டர் நசீர் முகமட்
3. இராம தனபாலன்
4. பன்னீர் செல்வம்
5. எஸ். அருள்செல்வன்
6. நோக்கையா
7. சுப்பையா
8. இரா. அருட்சுனன்
9. அன்பரசி முனியாண்டி
10. பால் சின்னப்பன்.