இந்த நாட்டில் மேலும் இணக்கமான எதிர்காலத்துக்காக தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
காசாவில் ஹாமாஸுக்கும் பாத்தாவுக்கும் இடையில் நிகழும் பூசலைச் சுட்டிக் காட்டிய அவர் இறையாண்மை கொண்ட ஒர் அரசாங்கம் மதிக்கப்படுவதற்கு ஒற்றுமையே நிலைக்களனாகும் என்றார் அவர்.
“அண்மையில் நான் காசாவுக்குச் சென்றிருந்த போது வலுவான அரசாங்கத்தை அமைக்க ஒன்றுபடுமாறு நான் ஹமாஸ், பாத்தா தலைவர்களிடம் கூறினேன். முஸ்லிம்களுக்கு ஒற்றுமை மிக முக்கியமானதாகும். ஒற்றுமையில்லா விட்டால் பேரழிவே ஏற்படும்,” என நஜிப் நேற்றிரவு ஜார்ஜ் டவுனில் உள்ள Kapitan Keling பள்ளிவாசலில் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்த நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கூறினார்.
அந்த நிகழ்வில் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர், பிரதமர் துறை அமைச்சர் நோர் முகமட் யாக்கோப், பினனக்கு அம்னோ தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
பொருளாதாரத்தை மேம்படுத்தி வளப்பத்தைப் பெருக்கும் வேளையில் அரசாங்கம் தேசிய ஒற்றுமைக்கு நிலைக்களனாகத் திகழும் நீதிக் கோட்பாடுகளை மறக்கவில்லை என்றும் நஜிப் சொன்னார்.
“மளிகைக் கடைகளையும் நாணய மாற்றுக் கடைகளையும் திறந்ததின் மூலம் பொருளாதாரத்துக்கு இந்திய முஸ்லிம் சமூகம் பெரும்பங்காற்றியுள்ளதை மறுக்க முடியாது.”
“அவர்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றனர். வரி செலுத்துவோரில் அவர்களும் உள்ளனர்.”
ஒரே மலேசியா அற நிறுவனத்துக்கு முஸ்லிம் லீக் வழங்கிய 2 மில்லியன் ரிங்கிட் நன்கொடைக்காக நஜிப் அதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.
அந்தப் பணம் அரசு சாரா அமைப்புக்களுக்கும் நாடு முழுவதும் உள்ள ‘மதராஸாக்களுக்கும்’ விநியோகம் செய்யப்படும்.
பெர்னாமா