இன்று பினாங்கில் டிஏபி நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில், முந்திய நாள் நடந்த சம்பவத்தைச் சொல்லி பிஎன்னைக் கிண்டல் செய்தது. மாநில டிஏபி தலைவர் செள கொன் இயோ, உரையாற்றியபோது நேற்று ஹன் சியாங் கல்லூரியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டுப் பொது உபசரிப்பை நினைவுகூர்ந்தார்.தென் கொரிய சூப்பர் ஸ்டார் பாடகர் சை-யும் அதில் கலந்துகொண்டு தம் காங்னாம் ஸ்டைல் பாடலால் கூட்டத்தை மகிழ்விக்கவிருந்தார். அதைக் குறிப்பிட்ட நஜிப் கூட்டத்தினரை நோக்கி, “சை-யை வரவேற்க நீங்கள் தயாரா?” என்று வினவினார். “ஆம்” என்று கூட்டத்தினர் உரத்த குரலில் கூவினர்.
பிறகு பிரதமர் அவர்களிடம் பிஎன்னை வரவேற்கத் தயரா என்று கேட்டார். அதற்குக் கூட்டத்தினர் “இல்லை” என்றனர்.
இதை நினைவுகூர்ந்த மாநில போக்குவரத்து, ஊராட்சி, சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினரான செள, பினாங்கு டைம்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி, “பிஎன்னை வரவேற்க துயாராக இருக்கிறீர்களா?”, என்று வினவினார். கூட்டத்தினர் “இல்லை” என்றனர்.
பின்னர் செள,“டிஏபியை வரவேற்கத் தயாரா? பக்காத்தானை வரவேற்கத் தயாரா? புத்ரா ஜெயா செல்லத் தயாரா?”, என்று வினவினர்.
இந்த ஒவ்வொரு கேள்விக்கும் அங்கு கூடியிருந்த சுமார் மூவாயிரம் பேரும் “ஆம்” என்று ஒருசேர குரல் எழுப்பினர்.
செள, கடந்த ஐந்தாண்டுகளாக பினாங்கை ஆட்சி செய்யும் வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கடந்த காலத்தில் டிஏபி-யால் தேசிய கொள்கைகளின் அமலாக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவும் அவற்றால் மக்கள் பாதிக்கப்படும்போது குறைசொல்லவும் மட்டுமே முடிந்தது.
“ஆனால், ஐந்தாண்டுகள் பினாங்கை ஆண்ட பிறகு, பினாங்கை மலேசியாவின் மற்ற பகுதிகளுக்கு ஒரு முன்மாதிரி மாநிலமாக ஆக்கியுள்ளோம்”,என்றாரவர்.
என்றாலும், விரைவில் நடக்கப்போகும் 13வது பொதுத் தேர்தலை பினாங்கு மக்கள் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது என்று செள எச்சரித்தார்.
‘பிஎன் வலுவான அரசியல் கூட்டணி’
“அதில் நாம் பிஎன்னை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அதுவே நாட்டில் உள்ள அரசியல் கூட்டணிகளில் வலுவானதாக இன்னமும் உள்ளது. அவர்களிடம் ஆதரவு இருக்கிறது, பணம் இருக்கிறது, ஊடகங்கள் இருக்கின்றன.
“பினாங்கில் வெற்றிபெறுவோம் என்று மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. பிஎன் சாதாரணக் கட்சியல்ல.
“பினாங்கில் ஆட்சி செய்வதால் பிஎன்னை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்று தப்புக்கணக்குப் போட வேண்டாம்.
“வரும் தேர்தல் வாழ்வா- சாவா என்ற போராட்டமாக இருக்கும். ஆட்சியில் தொடர்ந்திருக்க பிஎன் எதையும் செய்யும்”, என்றாரவர்.