அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய குடியுரிமையை ரத்துச் செய்யப் போவதாக மருட்டியதின் மூலம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எல்லா இந்தியர்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்.
சபாவில் கள்ளக் குடியேறிகளுக்கு நீல நிற அடையாளக் கார்டுகளையும் வாக்குரிமைகளையும் வழங்கப்பட்டதில் தமக்கு பங்கு இல்லை என மறுத்து வந்த மகாதீர் கையும் களவுமாக பிடிபட்டதும் மலேசியர்களுக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
தமது சட்ட விரோத நடவடிக்கையை நியாயப்படுத்தவும் அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவும் மகாதீர், மலாயாவில் சட்டப்பூர்வமாக வாழ்ந்த ஒரு மில்லியன் மக்களுக்கு முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் குடியுரிமை வழங்கியதாக சாடினார். மகாதீரைப் பொறுத்த வரையில் அம்னோ சட்டத்தை உருவாக்க வேண்டும். அது நியாயமா இல்லையா என்பதை பொருட்படுத்தாமல் அதனை மற்ற அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே மகாதீருடைய சித்தாந்தமாகும்.
வரலாற்று அடிப்படையில் பார்த்தால் 1957ம் ஆண்டு மலாயா சுதந்திரம் பெறுவதற்கு விதிக்கப்பட்ட முன் நிபந்தனையாக இறையருள் பெற்ற இந்த நாட்டை வளப்படுத்துவதற்கு ஒரு மில்லியன் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் குடியுரிமையை கூட்டணி அரசாங்கம் வழங்கியது. மலேசிய இந்தியர்களும் சீனர்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்துள்ளனர். வேர்வையும் சிந்தியுள்ளனர்.
அந்த நன்றியில்லாத மகாதீரும் அவருடைய தீவிரவாத அம்னோ/பெர்க்காசா ஆதரவாளர்களும் இந்த நாட்டுக்கு மலாய்க்காரர் அல்லாதார் ஆற்றியுள்ள பங்கை மறந்து விட்டனர். வரிகளில் 90 விழுக்காட்டை மலாய்க்காரர் அல்லாதார் குறிப்பாக சீனர்கள் கொடுப்பதாக மகாதீரே ஒரு முறை சொல்லியிருக்கிறார். அதே மகாதீர் வியட்னாமிய படகு மக்கள் வருவதைத் தடுக்க சுடுமாறு ஆணையிட்டதாகச் சொல்லப்படுகின்றது.
மகாதீர், பாகிஸ்தானியர்களுக்கும் பிலிப்பினோக்களுக்கும் இந்தோனிசியர்களுக்கும் ஏன் இந்திய முஸ்லிம்களுக்குக் கூட ஒரே நாளில் குடியுரிமை கிடைக்க அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் நீல நிற அடையாளக் கார்டுகளைப் பெறுவதற்குக் காத்திருக்கும் மலேசியாவில் பிறந்த 300,000 இந்தியர்கள், சீனர்கள் ஆகியோருடைய பிரச்னையைத் தாம் பிரதமராக இருந்த காலத்தில் மகாதீர் தீர்க்கவில்லை.
பெர்சே 2.0, பெர்சே 3.0 பேரணிகளை ஏற்பாடு செய்ததின் மூலம் மாமன்னருக்கு எதிராக தேசத் துரோகத்தை செய்ததற்காக அம்பிகாவை தூக்கில் போட வேண்டும் என சாலாக் எம்பி 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றக் கூட்டத்தில் யோசனை தெரிவித்தார். அம்னோவின் நியாயமற்ற தேசிய எதிர்ப்பு, கீழறுப்பு நடவடிக்கைகளுக்கு சவால் விடுத்த அத்தகையை மாபெரும் பேரணிகளை மலேசிய இந்திய பெண்மணியான அம்பிகா நடத்தியதை அம்னோ தலைவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மகாதீர் முகமட் வேண்டுகோள் விடுத்துள்ள மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பிஎன் -னுக்கு கிடைத்தால் மலேசியா பாழாகி விடும்.
மகாதீரையும் அவரது இன வேறுபாட்டுக் கொள்கையையும் ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை கௌரவமும் பெருமையும் நேர்மையும் உடைய எல்லா இந்தியர்களும் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். மலாய் பைபிளுக்கு எரியூட்டுமாறு இப்ராஹிம் அலி தமது ஆதரவாளர்களுக்கு அறைகூவல் விடுத்ததை மகாதீர் நியாயப்படுத்துவார். அதில் தேசத் துரோகம் ஏதுமில்லை என்றும் சொல்வார். ஆனால் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்கு அம்பிகா விடுக்கும் வேண்டுகோளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது தேசத் துரோகம் என அவர் கண்டனம் செய்வார்.
செயலற்றதாகி விட்டன, அடி பணிகின்றன
மகாதீர், அம்னோ தீவிரவாதிகளுடைய கடுமையான அதிகார அத்துமீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாத அளவுக்கு மஇகா, மசீச போன்ற பிஎன் உறுப்புக் கட்சிகள் மிகவும் செயலற்றதாகி விட்டன, அடி பணிகின்றன.
மகாதீர் ஆட்சியின் போது வழக்குரைஞர்கள் வழக்கு முடிவுகளை நிர்ணயம் செய்தனர். குத்தகைகளும் உயர் பதவிகளும் தேர்வு செய்யப்பட்ட சேவகர்களுக்குக் கிடைத்தன. மகாதீர் நோக்கங்களுக்கு தடைக்கற்களாக இருப்பதாக கருதப்பட்ட முன்னாள் தலைமைக் கணக்காய்வாளர் அகமட் நோர்டின், தேசியத் தலைமை நீதிபதி சாலே அபாஸ் போன்ற பொறுப்புள்ள குடிமக்கள் அகற்றப்பட்டனர். இருந்தும் அவரை அம்னோ தொடர்ந்து ஹீரோ எனக் கொண்டாடுகின்றது.
மகாதீர் உண்மையில் சட்ட ஆட்சிக்கு மதிப்புக் கொடுத்தால் அவர் தமது அறிக்கையை மீட்டுக் கொண்டு அம்பிகாவிடமும் நாட்டிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். அம்பிகா, தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான அவசரத் தேவை மீதான பொது மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்திய கௌரவமான தலை சிறந்த பிரஜை ஆவார். மகாதீர் இனத்தையும் சமயத்தையும் கொண்டு இந்த நாட்டைப் பிளவுபடுத்த இனவாத அடிப்படையில் தூண்டி விடும் அறிக்கைகளை வெளியிட்டு நஞ்சைக் கலந்து வருகிறார்.
கள்ளக் குடியேறிகளுக்கும் தகுதி இல்லாத குடியேற்றக்காரர்களுக்கும் குடியுரிமையும் திடீர் பூமிபுத்ரா தகுதியும் வழங்கி எல்லா மலேசியர்களுக்கும் துரோகம் செய்துள்ள மகாதீரின் குடியுரிமையே பறிக்கப்பட வேண்டும்.
அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என மகாதீர் கேட்டுக் கொண்டதை இது வரை எந்த மஇகா, மசீச தலைவரும் கண்டிக்கவில்லை. நியாயமான நல்ல சிந்தனையுள்ள எந்த மலேசியரும் 13வது பொதுத் தேர்தலில் பிஎன் -னை ஆதரிக்க மாட்டார்கள்.
—————————————————————————————————————————————————எஸ் ராமகிருஷ்ணன் முன்னாள் செனட்டர் ஆவார்