‘நஜிப் மோசமான ஆலோசகர்களைக் கொண்ட பலவீனமான தலைவர்’

anwarபிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ‘மோசமான ஆலோசகர்கள் சூழ்ந்துள்ள பலவீனமான தலைவர்’ என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  கூறியிருக்கிறார்.

அவர் நேற்றிரவு பினாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நஜிப் மலேசியர்களுடைய நலன்களையும் உரிமைகளையும் பாதிக்கின்ற பல பிரச்னைகள் பற்றிப் பேசத் தவறி விட்டதாகச் சொன்னார்.

அவற்றுள் கிறிதுஸ்துவ சமூகத்துக்கு அச்சத்தை ஏற்படுத்திய ‘அல்லஹ்’ என்னும் சொல்லைக் கொண்ட மலாய் பைபிளுக்கு எரியூட்டப் போவதாக பெர்க்காசா விடுத்த மருட்டலும் அடங்கும் என்றார் அவர்.

அமைதியாக இருப்பதற்காக அம்னோவைச் சாடிய அன்வார்,” அதனைச் செய்ய வேண்டாம் என நஜிப் எப்போதாவது அவர்களிடம் சொன்னதுண்டா ? அது தவறு என நஜிப் ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கிறாரா ? உங்களிடம் என்ன கோளாறு ?” என வினவினார்.

anwar3“பினாங்கில் நிகழ்ச்சி நடத்துவதற்கு Psy -யை மட்டுமே கொண்டு வரக் கூடிய ஆற்றலைக் கொண்ட பிரதமரா நீங்கள் ? பிரதமர் என்பவர் வழி நடத்த வேண்டும். கடுமையான முடிவுகளையும் எடுக்க வேண்டும்.”

“இந்த நாட்டை வழி நடத்துவதற்கு எனக்கு கட்டளை வழங்கப்பட்டால் நீங்கள் மலாய்க்காரராக இருந்தாலும் சீனராக இருந்தாலும் இந்தியராக இருந்தாலும் அல்லது டயாக்காக இருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். நீங்கள் தீவிரவாதியாக இருந்தால் நான் சொல்வேன்: ‘ இல்லை, இந்த நாடு எங்கள் நாடு. எல்லா மலேசியர்களுக்கும் இந்த நிலத்தில் உரிமையுண்டு.”

பினாங்கு சட்டமன்ற சபாநாயகருமான அப்துல் ஹலிம் ஹுசேன் பாலிக் புலாவில் ஏற்பாடு செய்திருந்த அந்த சீனப் புத்தாண்டு/நிதி திரட்டும் விருந்தில் கலந்து கொண்ட ஈராயிரம் பேரிடம் அன்வார் பேசினார்.

அந்த நிகழ்வில் யாசின் சகோதரர்கள்- Reformasi and Perjuangan- ஆகிய இரு பாடல்களை பாடினர்.

பினாங்கு முதலாவது துணை அமைச்சரும் மாநில பிகேஆர் தலைவருமான மான்சோர் ஒஸ்மான், மாநில டிஏபி தலைவர் சாவ் கோ இயாவ், பாலிக் புலாவ் எம்பி யூஸ்மாடி யூசோப் ஆகியோரும் அங்கிருந்தனர்.

பினாங்கிற்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அன்வார் நேற்று நிபோங் தெபாலில் தேநீர் விருந்திலும் பந்தாய் ஜெராஜாக் பள்ளிவாசலில் மக்ரீப் தொழுகையிலும் பத்து மாவ்ங், பாலிக் புலாவ் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களிலும் பாயான் பாருவில் மழை பெய்தும் ஆயிரம் பேர் கலந்து கொண்ட செராமா நிகழ்விலும் பங்கு கொண்டார்.

கூட்டரசு அரசமைப்பைத் திருத்துவதின் மூலம் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என யோசனை கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டைக் கண்டிக்கத் தவறி விட்ட நஜிப் “பலவீனமான பயந்து போயுள்ள’ தலைவர் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

anwar1“சபாவில் கள்ளக் குடியேறிகளுக்கு மை கார்டுகள் கொடுக்கப்பட்டது பற்றி அரச விசாரணை ஆணையத்தில் சாட்சியமளித்தவர்கள் தெரிவித்த விஷயங்கள் பற்றி வினவப்பட்ட போது மகாதீர் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் குடியுரிமை வழங்கியதாக குற்றம் சாட்டினார்,” என அன்வார் சொன்னார்.

“நஜிப் அது பற்றி ஏதாவது சொன்னாரா ? மற்ற இனங்களைத் தற்காக்கும் துணிச்சலைக் கொண்ட பிரதமரை பெற்றுள்ளோம் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? மகாதீர் செய்வது தவறு என அவரிடம் நஜிப் சொல்வாரா ? அவர் ஏதாவது சொல்லியுள்ளாரா ?”

“சீனர்களும் இந்தியர்களும் குடிமக்கள் என்றும் அவர்கள் பிள்ளைகள் நமது பிள்ளைகள் என அவர் எப்போதாவது மகாதீரிடம் சொன்னது உண்டா ? அவர் சொன்னதே இல்லை- காரணம் அச்சம்”

பினாங்கு மக்களுக்கு தலை வணங்குகிறேன்

கொரிய பாப் இசைக் கலைஞர்  Psy கலந்து கொண்ட பிஎன் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பு குறித்தும்  அன்வார் பேசினார்.

கூட்டத்தினர் ‘இல்லை’ எனச் சொன்ன போதும் அவர்கள் பிஎன் -னுக்குத் தயாரா எனத் தொடர்ந்து மக்களைக் கேட்ட நஜிப்பை அவர் கேலி செய்தார்.

“அரசியல்வாதிகள் மக்களுடன் இருக்கும் போது நீங்கள் சூழ்நிலையை அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிஎன் -னை ஆதரிக்கின்றனரா என நீங்கள் கேட்கும் போது அவர்கள் இல்லை எனச் சொன்னால் நீங்கள் விரைவாக இன்னொரு தலைப்புக்கு மாறி விட வேண்டும்,” என அன்வார் வேடிக்கையாகக் கூறினார்.

அப்போது கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

“பினாக்கு பிஎன் தலைவர்கள் பினாங்கில் கூட்டணி மீண்டும் ஆதரவைப் பெற்று விட்டதாகவும் முதலமைச்சர் லிம் குவான் எங்கை வெறுப்பதாகவும் அவரிடம் சொல்லியிருக்க வேண்டும். ஆகவே கூட்டத்தினர் ‘இல்லை’ எனச் சொன்னதை ‘ஆம்’ என்பதாக நஜிப் எண்ணியிருக்க வேண்டும். மிகவும் பரிதாபமாக இருந்தது.”

தாம் அந்த விஷயத்தை மிரியில் இருந்த போது கூறியதாகவும் அன்வார் சொன்னார். பினாங்கு மக்கள் துணிச்சலானவர்கள் என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

“மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அந்தக் கேள்வியை கேட்டிருந்தால் பதிலை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இது பிரதமர்,” என அவர் மேலும் கூறினார்.

“நான் பினாங்கைச் சேர்ந்தவன் என நான் அவர்களிடம் சொன்னேன். பினாங்கு மக்கள் துணிச்சலானவர்கள் என்பதை விட விவேகமானவர்கள் எனச் சொல்ல வேண்டும். நான் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்!”

TAGS: