‘காங்ணாம் ஸ்டைல்’ பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற தென் கொரிய பாப் இசைக் கலைஞரான Psy அண்மையில் பினாங்கில் நடத்திய நிகழ்ச்சிக்கு மலேசிய அரசாங்கம் ஏற்பாடும் செய்யவில்லை, பணமும் கொடுக்கவில்லை என Psy-யை நிர்வாகம் செய்யும் Scooter Braun Projects நிறுவனம் கூறியுள்ளது.
மலேசிய அரசாங்கம் பணம் கொடுத்ததாகக் கூறும் இணையத் தகவல்களும் கட்டுரைகளும் பொய்யானவை என பெர்னாமாவுக்கு அனுப்பிய அறிக்கையில் அது தெரிவித்தது.
“மலேசியா, பினாங்கில் அண்மையில் Psy நிகழ்ச்சிக்கு எங்களை மலேசிய அரசாங்கம் நியமிக்கவில்லை என்றும் பணம் கொடுக்கவில்லை என்றும் Scooter Braun Projects தெளிவாக எடுத்துச் சொல்ல விரும்புகிறது,” என அதன் அறிக்கை மேலும் கூறியது.
கடந்த திங்கிட்கிழமை ஒரே மலேசியா சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது அந்தக் கலைஞர் படைத்த நிகழ்ச்சிக்கு மலேசிய அரசாங்கம் ஆதரவு கொடுத்ததாக வலைப்பதிவுகளில் வெளியான தகவல்களையும் அந்த மேலாண்மை நிறுவனம் மறுத்தது.
ஒரே மலேசியா சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது நடத்தப்பட்ட Psy நிகழ்ச்சியில் அரசாங்கப் பணம் ஏதும் சம்பந்தப்படவில்லை என நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவுபடுத்தியிருந்தார்.
தமது நடன அசைவுகளில் ‘காங்ணாம் ஸ்டைல்’ பாணியை அறிமுகம் செய்து புகழ் பெற்ற அந்தக் கலைஞருடைய நிகழ்ச்சியைக் காண பொது மக்களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
ஹான் சியாங் கல்லூரியில் பினாங்கு பிஎன் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் Psy நிகழ்ச்சி முக்கியமானதாகத் திகழ்ந்தது
பெர்னாமா