ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் திருப்பி அனுப்பப்படுவதும் ‘அப்பட்டமான அதிகார அத்துமீறல்’ என்றும் ‘அனைத்துலக உபசரணை நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன’ என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார்.
“குறைந்த கட்டண விமான முனையத்தில் (LCCT) செனபோன் ‘நாட்டின் எதிரி’ எனவும் பாதுகாப்புக்கு மருட்டல் எனவும் கூறப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.”
“அத்தகையை குற்றச்சாட்டுக்களுக்கு முற்றிலும் எந்த ஆதாரமும் இல்லை,” என அவர் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
இந்த நாட்டுக்கு வருகின்றவர்களை-அவர்கள் அம்னோ அரசாங்கத்தை குறைகூறுவதால்- நாட்டின் எதிரிகளாக நடத்துவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எந்த உரிமையும் இல்லை என அன்வார் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
“மலேசியா அம்னோவுக்குச் சொந்தமானது அல்ல. அரசியல் பிணைப்புக்கள் எதுவாக இருந்தாலும் அது எல்லா மலேசியர்களுக்கும் சொந்தமானது.”
எதிர்வரும் பொதுத் தேர்தல் நேர்மை பற்றி செனபோன் கவலை தெரிவித்துள்ள வேளையில் அவர் இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாக இருக்கக் கூடிய வகையில் நடந்து கொள்ளவும் இல்லை, எழுதப்பட்ட எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என அந்த பிகேஆர் மூத்த தலைவர் வலியுறுத்தினார்.
“அத்துடன் அவர் எங்களுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தவிருக்கும் மற்ற ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கொள்ளவிருந்தார்.”
அனைத்துலக உபசரணை நடைமுறைகள் மீறப்பட்டன
“அவரை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு அவை காரணமாக முடியாது.”
“ஆகவே கட்சி அரசியல் நோக்கங்களுக்காக செனபோனைத் தடுத்து வைத்ததும் திருப்பி அனுப்பதிட்டமிட்டுள்ளதும் அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகமாகும்.”
“வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக காமன்வெல்த் உறுப்பு நாடுகளிலிருந்து வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை நடத்த வேண்டிய அனைத்துலக உபசரணை நடைமுறைகளும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதையும் அது காட்டுகின்றது,” என அன்வார் மேலும் சொன்னார்.
செனபோன் உடனடியாக விடுவிக்கப்பட்டு எந்தத் தடையுமின்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று அதிகாலை மணி 6.40க்கு LCCT வந்தடைந்த அந்த சுயேச்சை செனட்டரைக் குடிநுழைவுச் சட்டத்தின் 8 (3) பிரிவின் கீழ் குடிநுழைவு அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
குடிநுழைவு அதிகாரிகள் அவரை இன்றிரவு மணி 10.30க்கு ஏர் ஏசியா விமானத்தில் மெல்பர்னுக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அதிகாரிகள் செனபோனுடனும் மலேசிய வெளியுறவு, உள்துறை அமைச்சர்களுடனும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் காவலிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளதாகவும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பார் கார் கூறினார்.
செனபோன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலியா தொடர்ந்து வலுவான அரசந்தந்திர உறவுகளை பராமரித்து வரும் ஒரு நாட்டின் ஏமாற்றத்தை அளித்துள்ள வியப்பை ஏற்படுத்தியுள்ள நடவடிக்கை என்றும் அவர் வருணித்தார்.