“ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் செப்பாங் குறைந்த கட்டண விமான முனையத்தில் இன்று தடுத்து வைக்கப்பட்டு அவர் திருப்பி அனுப்பப்படவிருக்கும் நடவடிக்கை, சட்டத்திற்கு இணங்க எடுக்கப்பட்ட குடிநுழைவு விவகாரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.”
இவ்வாறு கூறும் உள் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், அத்தகைய நடவடிக்கை இங்கு வழக்கமான நடைமுறையே எனச் சொன்னார்.
செனபோன் விஷயத்தில் ‘சிறப்பாக ஏதுவுமில்லை’ என்றும் அரசியல் ஏதுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அது குடிநுழைவு விவகாரம். சாதாரண விஷயம். மலேசியர்களும் அதே நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அந்த நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை,” என அவர் சொன்னதாக மலாய் மொழி ஏடான சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“அவர் தடுத்து வைக்கப்பட்டதற்குப் பின்னணியில் எந்த அரசியல் அம்சமும் கிடையாது. அந்த நடவடிக்கை சட்டத்திற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதாக நான் எண்ணுகிறேன்.”
“நாட்டின் எதிரி” எனக் கருதப்பட்டதாக் அந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுவதையும் ஹிஷாமுடின் நிராகரித்தார். நிலவரத்தை திசை திருப்ப வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.
“நாங்கள் சட்டத்துக்கு இணங்க செயல்படுகிறோம். குடிநுழைவுத் துறை அந்த விவகாரத்தை தீர்க்கும்,” என்றும் அவர் சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.
இன்று அதிகாலை மணி 6.40க்கு LCCT வந்தடைந்த அந்த சுயேச்சை செனட்டரைக் குடிநுழைவுச் சட்டத்தின் 8 (3) பிரிவின் கீழ் குடிநுழைவு அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
குடிநுழைவு அதிகாரிகள் அவரை இன்றிரவு மணி 10.30க்கு ஏர் ஏசியா விமானத்தில் மெல்பர்னுக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அதிகாரிகள் செனபோனுடனும் மலேசிய வெளியுறவு, உள்துறை அமைச்சர்களுடனும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் காவலிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளதாகவும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பார் கார் கூறினார்.
செனபோன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலியா தொடர்ந்து வலுவான அரசந்தந்திர உறவுகளை பராமரித்து வரும் ஒரு நாட்டின் ஏமாற்றத்தை அளித்துள்ள வியப்பை ஏற்படுத்தியுள்ள நடவடிக்கை என்றும் அவர் வருணித்தார்.