ஹிண்ட்ராப் ஆதரவு இன்றி பக்கத்தான் 25 எம்பிகளை இழக்கக்கூடும்

hindraf_wathaஅடுத்த பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப்பின் ஆதரவு இல்லை என்றால் பாக்கத்தான் ரக்யாட் 25 நாடாளுமன்ற இருக்கைகளை இழக்க வேண்டியிருக்கும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் பி. வேதமூர்த்தி கூறுகிறார்.

பிரதமர் நஜிப்பின் தலைமையிலான பாரிசான் நேசனல் பக்கம் இந்தியர்களின் ஆதரவு கூடிவரும் வேளையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

ஆனால், எதிர்தரப்பு கூட்டணி தமது இயக்கத்துடன் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்டால், ஹிண்ட்ராப் இந்தியர்களை பாக்கத்தான் பக்கம் திருப்பி விடுவதற்கு உதவ முடியும் என்று வேதமூர்த்தி இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“2007-2008 ஆம் ஆண்டுகளில் இருந்ததைப் போல் இந்திய சமூகம் அரசாங்கத்துடன் போரில் ஈடுபட்டிருக்கவில்லை.

நஜிப் நிருவாகம் அடிமட்டத்தில் கடுமையாக உழைத்துள்ளது. அவர்கள் இந்தியர்களின் வாக்குகளில் 55 விழுக்காட்டை பெற்றால், பாக்கத்தான் 25 நாடாளுமன்ற இருக்கைகளை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்றாரவர்.

மேலும், கெடா “நிச்சயமாக கவிழும்”. சிலாங்கூர் மீண்டும் பாரிசானால் கைப்பற்றப்படும் பேராபத்தில் இருக்கிறது என்றார் வேதமூர்த்தி.

“இதனைத் தவிர்க்க முடியும் என்று ஹிண்ட்ராப் நம்புகிறது. தயார் நிலையிலிருக்கும் எங்களுடைய கிட்டத்தட்ட 2,000 வீரர்கள் களமிறங்கத் தயாராக இருக்கின்றனர். அவர்கள் ஊதியம் பெறாத தன்னார்வலர்கள்.  அவர்கள் அதனைச் செய்து விடுவர்.”

நிச்சயமற்ற நிலையில் இருக்கும் இந்திய வாக்குகளில் குறைந்தது பாதியை எதிரணிக்குச் செல்வதை பாக்கத்தானுக்கும் ஹிண்ட்ராப்புக்கும் இடையிலான பங்காளித்துவம் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

TAGS: