ஜோகூரில் இட ஒதுக்கீடுகள் மீது டிஏபி-க்கும் பிகேஆர் -கட்சிக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் தகராறு வெளிப்படையான மோதலாக வெடித்துள்ளது.
சுவா ஜுய் மெங்-கிடமிருந்து ஜோகூர் மாநில பிகேஆர் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அந்த மாநில டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், பிகேஆர் அன்வார் இப்ராஹிமை அல்லது தலைவர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலை கேட்டுக் கொண்டார்.
தாம் இனிமேலும் சுவா-வுடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் 2010ம் ஆண்டு சுவா மாநில பிகேஆர் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் ஜோகூரில் டிஏபி-க்கும் பிகேஆர் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட வலுவான ஒத்துழைப்பு சுவா-வின் ‘ஆணவத்தால்’ சிதைந்து விட்டது என்றும் சீன மொழியில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பூ கூறினார். அவர் ஸ்கூடாய் தொகுதிக்கான மாநிலச் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார்.
“ஜோகூரில் பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுக்கு இடையில் உறவுகள் சீர்குலையும் என நான் கவலைப்படுகிறேன்.”
“அடித்தட்டு நிலையில் உள்ள டிஏபி, பிகேஆர் தலைவர்களுக்கு இடையில் ஒத்துழைப்பு நிலவுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சுவாவின் ஆணவம் கட்சிகளையும் தாண்டிச் சென்று விட்டது. ஜோகூர் பக்காத்தானில் பிளவு ஏற்படுவதற்கு அதுவே முக்கியக் காரணம்,” என்றும் பூ சொன்னார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு முக்கியமானது எனக் கருதப்படும் ஜோகூரில் பக்காத்தான் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை ஒருங்கிணைக்க சுவாவின் பதவியை அன்வார் அல்லது வான் அஜிஸா ஏற்றுக் கொள்வது நல்லது என்றும் அவர் மேலும் கூறினார்.
கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் பிகேஆர் போட்டியிட்ட கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்படுவதற்கு புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங்-கை பரிந்துரை செய்த டிஏபி-யை மலேசியாகினிக்கு வழங்கிய பேட்டியில் சுவா குறை கூறியது குறித்தும் பூ மகிழ்ச்சி அடையவில்லை.
“பக்காத்தான் மத்தியத் தலைமைத்துவம் எந்த இறுதி முடிவும் செய்யாத வேளையில் தாம் கேலாங் பாத்தாவில் பிகேஆர் கட்சியைப் பிரதிநிதிக்கப் போவதாக சுவா அடிக்கடி அறிவித்து வந்துள்ளார்,” என அவர் குறிப்பிட்டார்.
“தம்மை ஜோகூர் ஜமீன்தார் என நினைத்துக் கொண்டு ஜோகூர் டிஏபி, பாஸ் தெரிவித்த பல யோசனைகளை அவர் நிராகரித்துள்ளார்.”
சுவா பக்காத்தானுக்குப் புதியவர். அவர் மூன்று கட்சிகளுக்கு இடையில் நீண்ட காலமாகத் தொடரும் ஒத்துழைப்பை மதிக்கவில்லை என்றும் பூ குறிப்பிட்டார்.
சுவா ‘பிகேஆர் கட்சியை இன்னொரு மசீச-வாக்கி வருகிறார் என்றும் அவர் வெளிப்படையாகவே சாடினார்.
சுவாவின் கருத்துக்களைப் பெறுவதற்கு மலேசியாகினி இப்போது முயன்று வருகின்றது.