தைப்பூச திருவிழா குறித்து யூனிவர்சிட்டி பெர்தகனான் நேசனல் விரியுரையாளர் ரித்துவான் தீ அப்துல்லா எழுதி சினார் ஹரியான் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையை இனவாதமானது என்று பிகேஆர் கடுமையாகச் சாடியுள்ளது.
அக்கட்சியின் மனித உரிமைகள் மற்றும் சட்டப் பிரிவின் துணைத் தலைவர் எஸ். ஜெயதாஸ் அக்கட்டுரையில் ரித்துவான் திருவிழா குறித்து தெரிவித்துள்ள கருத்து அனைத்து மலேசியர்களுக்கும் சமய சுதந்திரத்தை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 11 ஐ மீறியதாகும் என்று இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“அந்த அறிக்கை ஆழ்ந்த இனவாத உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அமைதியான சமயத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கிடையே அது அமைதியின்மையையும், குழப்பத்தையும் உண்டுபண்ணும்”, என்று அவர் கூறினார்.
“வெள்ளிக்கிழமை (முஸ்லிம்) தொழுகையின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி நாம் கேள்வி எழுப்புவதில்லை, ஏனென்றால் சமயத்தின் உரிமையை நாம் மதிக்கிறோம்.”
தைப்பூச திருவிழா நெரிசல்
சினார் ஹரியான் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள Kesabaran umat Islam ada had (முஸ்லிம் பொறுமைக்கு அளவு உண்டு) என்ற கட்டுரையில், பத்துமலையை சுற்றி இந்து சமய திருவிழாவிற்கு முன்பும், விழாவின் போதும் நெரிசல் ஏற்படுவது குறித்து ரித்துவான் கருத்து தெரிவித்துள்ளார்.
“தைப்பூச திருவிழாவின் போது நாம் ஏதாவது புகார் செய்துள்ளோமா? விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, பத்துமலை வட்டாரத்தைச் சுற்றிலும் நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை தாங்கள் விரும்பிய இடத்தில் நிறுத்தி வைக்கிறார்கள்.
“இந்நாட்டில் வேறு எந்த நிறமும் இல்லாதது போல், ஒரே நிறத்தைச் சேர்ந்தவர்கள் கடலெனத் திரண்டு வருகின்றனர்”, என்றவர் எழுதியுள்ளார்.
“வாக்குகளுக்காக இஸ்லாமிய திட்டம் தியாகம் செய்யப்படுகிறது”
2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெறப்பட்ட மத்திய மற்றும் மாநில நிதி ஒதுக்கீடுகளால் ஒரு சமயத்தில் அச்சமளிப்பவைகளாகத் தென்பட்ட “கோயில்களும் சிலைகளும்” இப்போது பெரியதாகவும், உயரமானதாகவும், வண்ணமயமாகவும் இருக்கின்றன என்று ரித்துவான் கூறுகிறார்.
“அனுதாபத்தையும், வாக்குகளையும் பெறுவதற்காக நாம் (மலாய் முஸ்லிம்கள்) அனைத்தையும் விட்டுக்கொடுத்து விட்டோம் என்பதை நான் காண்கிறேன். இனிமேல் இந்த நாட்டிற்கு அடையாளம் ஏதும் இல்லை.
“இஸ்லாம் மற்றும் மலாய் திட்டங்கள் காணாமல் போய்விட்டன. 13 ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்றாலும், தற்போதைய சூழ்நிலை மாற்றம் காணாது என்று உறுதியாக நம்புகிறேன்.
“நாம் தொடர்ந்து நம்மை கவனித்துக்கொள்வதற்கு மாறாக மற்றவர்கள் மீது அக்கறையுள்ளவர்களாக இருப்போம்.”
விஸ்பரூபம்
முஸ்லிம்களை அவமதிக்கின்ற காட்சிகளைக் கொண்ட, ஆனால் பின்னர் திருத்தப்பட்ட, விஸ்பரூபம் தமிழ் படத்தைத் தற்காத்து பேசிய பாரிசானின் பங்காளிக் கட்சியான மஇகாவை சாடிய போது ரித்துவான் இவற்றை எல்லாம் கூறினார்.
இந்நாட்டில் முஸ்லிம்களை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வேளையில், இந்நாட்டின் இதர சமயங்களின் உணர்வுகளுக்கு அவமதிப்பு ஏற்படுத்தி விட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறிய ரித்துவான், மாட்டுத்தலை மற்றும் தேவாலய எரிப்பு சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை அவர் சுட்டிக் காட்டினார்.
எதிர்வரும் தேர்தலில், மலாய்க்கார்-பெரும்பான்மையான தொகுதியில் ஓர் இந்திய வேட்பாளர் போட்டியிட வேண்டிய நிலை இருந்தால், அங்கு ஓர் இந்திய முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.