தவறான தடத்தில் இண்ட்ராப் – கணபதி ராவ், வசந்தகுமார்

hindraf இண்ட்ராபுடன் கருத்துப்பூசலில் ஈடுபடும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இந்திய ஏழைகள் சமூக-பொருளாதார மேம்பாடு காண்பதற்கான இண்ட்ராபின் செயல்திட்டம் மீது ஒரு விவாதம் நடக்கிறது. அதில் எங்களின் கருத்தை முன்வைக்கவும் அந்த இலக்கை அடைவதற்கு சிறந்த வழியை எடுத்துரைக்கவும் விரும்புகிறோம்.

மலேசியர்கள் என்ற முறையிலும், 2007-இல் இண்ட்ராப் இயக்கத்திலும் அவ்வாண்டு நவம்பர் 25-இல் அது ஏற்பாடு செய்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியிலும்  பங்கேற்று அதன் விளைவாக ஐஎஸ்ஏ கைதிகளாக இருந்தவர்கள் என்ற முறையிலும் இவ்விசயத்தில் கருத்துச் சொல்லும் உரிமை எங்களுக்கு உண்டு என்று எண்ணுகிறோம்.

அப்பேரணியின் காரணமாக 2008, மார்ச் மாதம் நடைபெற்ற 12வது பொதுத் தேர்தலில் பிஎன் அதுகாறும் இருந்துவந்த இந்தியர் ஆதரவை இழந்தது. அதன் விளைவாக அக்கூட்டணி 1957-இலிருந்து அனுபவித்து வந்த மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையை இழந்தது.

அதனால் நாட்டு மக்கள் நன்மை அடைந்தனர். தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படச் செய்து நாட்டுக்கு நன்மை செய்ததற்காக இண்ட்ராப்பை பாராட்ட வேண்டும்.

ஆனால், இண்ட்ராப் நடத்திய அப்பேரணிக்கு அளவுமீறி முக்கியத்துவம் அளிப்போமானால். அம்னோ ஆதிக்கத்தில் உள்ள பிஎன் எந்தத் தவற்றைச் செய்ததால் மலேசிய வாக்காளர்களின் ஆதரவை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதோ அதே தவற்றை நாமும் செய்தவர்கள் ஆவோம்.

பக்காத்தான் இந்திய ஏழைகளின் மேம்பாட்டுக்கான இண்ட்ராப்பின் செயல்திட்டத்தை ஆதரிக்க வேண்டும், 13வது பொதுத் தெர்தலில் ஒரு டஜன் இடங்கள் கொடுக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் இண்ட்ராப் 2008 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட நன்மைகளுக்கு எதிராகத் தன்னை நிறுத்திக்கொள்ள முற்பட்டுள்ளது.

பிஎன் சமுதாய பிரச்னைகளுக்கு இன-அடிப்படையில் தீர்வுகாணும் போக்கைத்தான் நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்தது.எல்லாமே இன அடிப்படையிலும் கூடவே சமய அடிப்படையிலும் நோக்கப்பட்டது.

இதுவே பிஎன்-னின் அணுகுமுறையாக இருந்து அதன் ஆட்சியை உளுத்துப்போகும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. அதை சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் தெளிவாகவே காண முடிகிறது. அதை மாற்ற வேண்டும் என்ற பக்காத்தானின் அறைகூவலுக்கு வாக்காளப் பெருமக்களும் செவிசாய்க்கத் தொடங்கியுள்ளனர்.

60விழுக்காடு குடும்பங்கள் ரிம1,500-க்கும் குறைவான வருமானம் பெறுகின்றன

நாட்டின் பிரச்னைகளுக்கு இன-அடிப்படையிலான தீர்வைவிட தேவை-அடிப்படையிலான தீர்வே அவசியமெனப்படுகிறது. நாட்டில் 60விழுக்காடு குடும்பங்கள் ரிம 1,500-க்கும் குறைவான வருமானம் பெறுகின்ற நிலை வருமானத்தில் படுமோசமான சமத்துவமின்மை நிலவுவதைக் காண்பிக்கிறது.

ரிம1,500-க்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களில் இந்தியர்களின் விகிதாசாரம் அதிகம் என்பதால் அவர்களின் பிரச்னை அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அதே நிலையில் உள்ள மலாய்க்காரர்கள், சீனர்கள், டாயாக்குகள், கடாசான்டுசுன், மூருட் ஆகியோரின் நிலையைவிட அவசரமான ஒன்று அல்ல.

அதுதான் மிகவும் அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்று வாதாடுவது இனச்சார்பான வாதமாகும். அதுதான், சுய-தோல்விக்கு இட்டுச்செல்லும் அம்னோ-பிஎன் அணுகுமுறை.

பக்காத்தான், தேவை-அடிப்படையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்போவதாக வாக்குறுதியளித்துள்ளது. அம்னோ-பிஎன் நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ள இழிநிலையிலிருந்து மீட்டெடுக்க இதுவே அறிவார்ந்த வழிமுறையுமாகும்.

நாங்கள் அவர்களின் வாக்குறுதியை நம்ப நல்ல காரணம் உண்டு. வாக்குறுதியை  நிறைவேற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் நன்கு அறிவார்கள்.

எங்கள் விருப்பம் என்னவென்றால், பக்காத்தான் அது கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்ற ஒரு வாய்ப்புக் கொடுக்க  வேண்டும்; பக்காத்தானுக்கு ஆதரவளிக்க இண்ட்ராப் நிபந்தனைகள் போடக்கூடாது; இண்ட்ராப் தேர்தலில் போட்டியிடுவதை விடுத்து அழுத்தம் கொடுக்கும் ஒரு குழுவாகவே தொடர்ந்து இருக்க வேண்டும்.

இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி எடுத்துரைதுள்ள இண்ட்ராப்பின் இப்போதைய நிலைப்பாடு ஒரு முட்டுச் சந்துக்கு ஒப்பாகும். அதில் முன்னே செல்ல இடமில்லை. அது இன அடிப்படையிலான அணுகுமுறையை அழுத்தமாக வலியுறுத்துமே தவிர மலேசிய ஏழைகளின் பிரச்னை தீர உதவாது.

=======================================================================================

வி.கணபதி ராவ், கே. வசந்தகுமார்: 2007-இல் ஐஎஸ்ஏ-இன்கீழ் தடுத்துவைக்கப்பட்ட இண்ட்ராப் தலைவர்களில் இவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

TAGS: