ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை அமலாக்க 22.5 பில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை

hindraf“ஏழை இந்தியர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் முக்கிய தேசிய மேம்பாட்டு நீரோடையில் இணைப்பதற்கான ஐந்தாண்டுப் பெருந்திட்டமான” ஹிண்டராப் ஆவணத்தை குறை கூறுகின்றவர்கள் அந்த ஆவணத்துக்கான ஆதரவைக் குறைக்க விரும்புகின்றனர். ஹிண்ட்ராப் பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை சுட்டிக்காட்டி அதனை தாக்குகின்றனர்.

அவ்வாறு குறை கூறுகின்றவர்கள், பிஎன் முகாமிலிருந்து பக்காத்தான் முகாம் வரையில் உள்ளனர். அந்தப் பெருந்திட்டத்துக்கான ஆதரவைக் குறைக்க அவர்கள் பல தீய வழிகளில் முயலுகின்றனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குறிப்பாக இந்தியர்களுக்கு முக்கிய விஷயமாக மாறி வருவதை அவர்கள் உணரவில்லை.  அவர்கள் உண்மையில் தங்களைத் தாங்களே தாக்கிக் கொள்கின்றனர்.

hindraf1இந்த நமது நாட்டில் புது வாழ்வு பெறவும் நீதி, உரிமைகள் ஆகியவற்றைப் பெறவும் ஏழை இந்தியர்களும் ஒதுக்கப்பட்டவர்களும் கொண்டுள்ள ஏக்கங்கள், அவாக்கள் ஆகியவற்றின் வெளிப்பாடே அந்த ஹிண்ட்ராப் பெருந்திட்டமாகும்.

கோலாலம்பூர் சாலைகளில் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த பேரணி, மலேசிய இந்தியர்கள் கொண்டிருந்த விரக்தியின் வெளிப்பாடாகும்.

2007ம் ஆண்டு அம்னோவுக்கு எதிரான ஆத்திரம் அப்போது காரணமாக இருந்தது. இப்போது  அந்த ஏக்கங்கள் நிறைவேற்றப்படாதது காரணமாகும். ஆகவே அந்த ஆவணம் ஒரே மாதிரியான முக்கியத்துவம் வாய்ந்தது  என்பதை நாம் உணர வேண்டும்.

ஹிண்ட்ராப் அந்த ஏக்கங்களுக்கு ஒன்று திரட்டி வடிவமைத்தது. அந்த அவாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக அவற்றை தேர்தல் நடைமுறையில் இணைக்க ஹிண்ட்ராப் முயலுகின்றது.

hindraf3அந்தப் பெருந்திட்டம் ஹிண்ட்ராப்புக்கு சொந்தமானது அல்ல. அது மலேசிய இந்தியர்களைப் பற்றியதாகும். ஹிண்ட்ராப் தூதுவன் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

நாம் இன்று அந்தப் பெருந்திட்டத்தின் எஞ்சியுள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்: இந்தியர்கள் எதிர்நோக்கும் சமநிலையற்ற வேலை வாய்ப்பு சூழ்நிலையும் வர்த்தக வாய்ப்புக்களும்; அந்த சமூகத்திற்கு எதிராக விதி விலக்கு பெற்றவர்களைப் போல போலீசார் நடந்து கொள்ளும் முறை; மலேசியாவில் மனித உரிமைகள் தரம்.

இந்த நாட்டில் சிறுபான்மை விவகார அமைச்சு ஏன் அமைய வேண்டும் என்பதையும் நாம் விளக்குவோம்.

சமநிலையற்ற வேலை வாய்ப்பு சூழ்நிலையும் வர்த்தக வாய்ப்புக்களும்

அரசாங்கச் சேவையிலும் அரசாங்கத்துடன் தொடர்புடைய எல்லா நிறுவனங்களிலும் எல்லா நிலைகளிலும் மலேசிய இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் திறக்கப்பட வேண்டும்

அனைத்து அரசாங்க, அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களில் 10 விழுக்காட்டினர் இந்தியர்களாக இருக்க வேண்டும். டாக்ஸி, லாரி, பாஸ் அனுமதிகளிலும் குத்தகைத் திட்டங்களிலும் சிறு வணிகர் வியாபாரத்திலும் பழைய உலோக வியாபார அனுமதிகளிலும் பராமரிப்பு வேலைகளிலும் தொழில் உரிமங்களிலும் 10 விழுக்காடு இந்தியர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

ஊராட்சி மன்றங்கள், மாநில அரசுகள், கூட்டரசு அரசாங்கம், கூட்டரசு நிறுவனங்கள், அரசு தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவை வழங்கும் வர்த்தகங்களிலும் குத்தகைகளிலும் 10 விழுக்காடு இந்திய வர்த்தகர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தொழில் முனைவர் மேம்பாட்டு பயிற்சிகளிலும் அவர்களுக்குச் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட இந்தியர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற துறைகளில் சிறிய தொழில்களை தொடங்க ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.

தெக்குன் திட்டத்தைப் போன்ற நிபந்தனைகளைக் கொண்ட மைக்ரோ கடனுதவியும் இந்திய விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அம்னோ பரிந்துரை செய்த தெக்குன் நேசனல் என்ற மைக்ரோ கடன் திட்டத்தை அரசாங்கம் நடத்தி வருகின்றது.

இப்போது இயங்கி வரும் இந்திய சிறு வணிகர்களுக்கு தெக்குன் திட்டத்தில் வழங்கப்படுவதைப் போன்று

தொழில் நுட்ப, நிர்வாக ஆதரவும் கொடுக்கப்பட வேண்டும். அல்லது தெக்குன் திட்டம் இன வேறுபாடின்றி அனைவருக்கும் திறக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் அங்கீகாரங்கள் சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்கள் பொது மக்களுக்கு எளிதாகக் கிடைக்க வேண்டும்.

அந்த பெருந்திட்டத்தில் உள்ள எல்லாப் பரிந்துரைகளையும் அமலாக்குவதற்கு ஆண்டுக்கு 4.5 பில்லியன் ரிங்கிட் தேவைப்படும் என ஹிண்ட்ராப் மதிப்பிட்டுள்ளது. ஆகவே ஏழ்மையில் உள்ள மலேசிய இந்தியர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோருடைய அனைத்து முக்கியமான தேவைகளையும் பூர்த்தி செய்ய 22.5 பில்லியன் ரிங்கிட் தேவைப்படும்

hindraf4போலீஸ் படைக்கு வழங்கப்பட்டுள்ள விதி விலக்கு

அரச மலேசிய போலீஸ் படையின் நடவடிக்கைகளையும் நிர்வாகத்தையும் மேம்படுத்துவது மீதான அரச ஆணையம் வழங்கிய பரிந்துரைகளுக்கு இணங்க போலீஸ் புகார்கள், நன்னடத்தை மீது சுயேச்சை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

மலேசியப் போலீஸ் படையின் தடுப்புக் காவலில் இருக்கும் போது குடிமக்கள் மரணமடைவதை நிறுத்துவதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களுக்கு இணங்க மலேசியச் சட்டங்களும் இருக்க வேண்டும். தான் இன்னும் ஏற்றுக் கொள்ளாத ஐநா-வின் அனைத்து அனைத்துலக ஒப்பந்தங்களில் மலேசியா கையெழுத்திட்டு அங்கீகரிக்க வேண்டும்.

சிறுபான்மை விவகார அமைச்சு

சிறுபான்மை விவகார அமைச்சு என்னும் புதிய கூட்டரசு அமைச்சை உருவாக்குவது அந்தப் பெருந்திட்டத்தில் கூறப்பட்டுள்ள இன்னொரு முக்கியக் கோரிக்கை ஆகும்.

அந்த அமைச்சின் கடமைகளாக இவை இருக்க வேண்டும்:

மலேசியாவில் ஒதுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகங்களுக்கான சமூக பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளை வழி நடத்துவது,

தேவையான நிதி ஒதுக்கீடுகளுக்கு திட்டமிட்டு அவற்றைப் பெறுவது,

எல்லா மேம்பாட்டு முயற்சிகளுக்கும் திட்டமிட்டு நிறைவேற்றுவது,

ஒதுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான ஒதுக்கீடுகளும் அளவுக் கட்டுப்பாடுகளும்

அமலாக்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சுகளை கண்காணிப்பது,

தனது பார்வையில் உள்ள சமூகங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பொறுப்பேற்பது.

ஒதுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகமாக அந்த அமைச்சின் கீழ் அடையாளம் காணப்படும் முதலாவது பிரிவாக ஏழை இந்தியர்களும் ஒதுக்கப்பட்டவர்களும் இருக்க வேண்டும். மற்றவர்கள் ஒதுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகங்கள் என்ற பிரிவில் அடையாளம் காணப்பட்டு சேர்க்கப்பட வேண்டும்.

சிறுபான்மை விவகார அமைச்சு மற்ற அமைச்சுக்களை அணுக வேண்டிய அவசியமில்லாமல் சுயேச்சையாக தனது மேம்பாட்டு முயற்சிகளில் இறங்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் மிகவும் பிடிவாதமான இனவாத நிர்வாகத்தினால் ஒதுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகங்களின் சமூக மேம்பாட்டு முயற்சிகள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

அந்த அமைச்சு சுமூகமாக இயங்குவதற்குத் தேவையான நிபுனத்துவத்தை வழங்க ஹிண்ட்ராப் தயாராக இருக்கிறது

———————————————————————————————————–

என். கணேசன் ஹிண்டரப்பின் தேசிய ஆலோசகர் ஆவார்

TAGS: