டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை வெளிப்படையாக ஆதரித்துள்ளது குறித்தும் தமக்கு எதிரான விசாரணையைத் தொடங்குமாறு பிகேஆர் தலைமைத்துவத்தை கேட்டுக் கொண்டது குறித்தும் தாம் அவர் மீது ‘மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக’ ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் கூறுகிறார்.
தமது முன்னாள் மசீச உறுப்பியம் பற்றி கர்பால் கேள்வி எழுப்பியிருப்பதும் தமக்கு வருத்தத்தை தந்துள்ளதாகவும் 2009ம் ஆண்டு ஜுலை மாதம் மசீச-விலிருந்து பிகேஆர் கட்சிக்கு மாறிய சுவா சொன்னார்.
“அம்னோ மாறவில்லை என்றால் பிஎன் -னிலிருந்து மசீச விலக வேண்டும் என நான் மசீச-வில் இருந்த போது கூறினேன். இறுதியில் என்னுடைய டத்தோ பட்டம் பறிக்கப்பட்டும் கூட நான் மக்களுக்கு உதவும் பொருட்டு என் அரசியல் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக நான் மசீச-விலிருந்து விலகிக் கொண்டேன்.”
“இருந்தும் கர்பால் என்னை இது போன்று குறை கூறியுள்ளார். அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது,” என சுவா நேற்று சைனா பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அரசியலில் தீவிரமாக இருந்து விட்டதால் தாம் அதிலிருந்து விலக வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் குறிப்பிட்ட அந்த முன்னாள் சுகாதார அமைச்சர், வரும் பொதுத் தேர்தல் தமக்கு கடைசித் தேர்தலாக இருக்கலாம் என்றார்.
என்றாலும் வரும் தேர்தலில் தாம் போட்டியிட முடியும் எனத் தாம் நம்புவதாகவும் சுவா சொன்னார். இறுதி முடிவு கட்சியைப் பொறுத்தது என்றார் அவர்.
பக்ரி அல்லது கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் தாம் போட்டியிட விரும்புவதாகத் தாம் ஒரு போதும் சொல்லவில்லை என அவர் வலியுறுத்தினார்.
நடுவர் பணியாற்ற பாஸ் தயார்
இதனிடையே சுவாவும் பூ-வும் வாக்குவாதங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜோகூர் பாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவர்களுக்கு இடையிலான தகராற்றைத் தீர்த்து வைக்க நடுவர் பணியாற்றவும் பாஸ் தயாராக இருப்பதாக ஜோகூர் பாஸ் ஆணையாளர் மாஹ்போட்ஸ் முகமட் கூறினார்.
என்றாலும் பூ வெளிப்படையாக சுவா குறை கூறியிருக்கக் கூடாது என அவர் கருதுகிறார்.
பூ வெளிப்படையாக பேசியிருப்பது ஜோகூர் பக்காத்தான் ராக்யாட்-டுக்கு தவறான தோற்றத்தைத் தந்து விடும் என அவர் சொன்னதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதனால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்த்தரப்புக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்ற எண்ணத்தையும் அது தந்து விடும் என்றார் அவர்.
ஜோகூர் பக்காத்தானில் மூன்று கட்சிகளும் தொகுதி ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களை முடித்துக் கொண்டு விட்டன என்றும் இன்னும் சில இடங்களே பாக்கியுள்ளன என்றும் மாஹ்போட்ஸ் தெரிவித்தார்.
“அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் பற்றிக் கேள்விப்பட்டதும் பூ-வுடனும் சுவா-வுடனும் தொடர்பு கொண்டேன். ஆனால் ஒருவருடன் மட்டுமே பேச முடிந்தது.”
“அவர்களை பேச்சுக்களுக்கு இணங்கச் செய்ய நான் முயற்சி செய்வேன்,” என பாஸ் தேவான் உலாமாப் பிரிவுத் துணைத் தலைவருமான அவர் தெரிவித்தார்.
சுவா ‘ஜமீன்தாரைப் போல நடந்து கொள்வதால்’ ஜோகூர் பிகேஆர் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று பூ அறிக்கை வெளியிட்ட பின்னர் பூ-வுக்கும் சுவா-வுக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டது.
அந்த இரு தலைவர்களும் இட ஒதுக்கீடுகள் மீதான தங்கள் தகராறுகளைக் கட்சியில் உள்ள வழிகள் மூலமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.