UEC என்ற ஐக்கிய தேர்வு சான்றிதழை உடனடியாக அங்கீகரிக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பக்காத்தான் ராக்யாட் கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை வாங்குவதற்கான தந்திரமாக அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அது கூறியது.
பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுச் சேவைக்கும் நுழைவுத் தகுதியாக அந்த சீன உயர் நிலைப்பள்ளித் தேர்வை ஏற்றுக் கொள்வதின் மூலம் அரசாங்கம் தனது துணிச்சலைக் காட்ட வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா சொன்னார்.
“அந்த அங்கீகாரம் இரு தரப்பு அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் அங்கீகாரத்தை அறிவிக்க வேண்டும்.”
“பொதுத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் அதனை பக்காத்தான் அமலாக்குவதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அதனைச் செய்தால் அதற்கான பெருமை பிரதமரையே சாரும்,” என பத்து எம்பி-யுமான சுவா சொன்னார். அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார்.
டோங் ஜோங் என்ற ஐக்கிய சீனப் பள்ளிக்கூடக் குழுக்கள் சங்கம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட நஜிப், UEC சான்றிதழ் தொடர்பில் அறிவிப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை.
நாடு முழுவதும் உள்ள 60 சீன சுயேச்சை உயர் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் எடுக்கும் தனியார் தேர்வான UEC-க்கு அரசாங்க அங்கீகாரத்தைப் பெறுவதற்கு டோங் ஜோங்கும் மற்ற சீன அமைப்புக்களும் நீண்ட காலமாகப் போராடி வருகின்றன.
மலேசிய அரசாங்கம் அதனை அங்கீகரிக்கவில்லை என்றாலும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா போன்ற பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு நுழைவுத் தகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.