நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான், “மலாய்க்காரர்கள் செயல்முனைப்பற்றவர்களாக இருந்தால் மறைந்து போவார்கள்” என்று கூறியது குறித்து டிஏபி போலீசில் புகார் செய்துள்ளது.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கீர் ஜோகாரி, ஜாலான் பட்டானியில் உள்ள வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இன்று காலை பத்து மணிக்கு அப்புகாரைச் செய்தார்.
போலீஸ் புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜைரில்,“அம்னோ தலைவர்களுக்கு, பினாங்கில் மலாய்க்காரர்கள் மருட்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், ஓரங்கட்டப்படுகிறார்கள் என்று மலாய்க்காரர் நிலை பற்றிப் பொய்யான அறிக்கைகள் விடுவதைத் தவிர்த்து பேசுவதற்கு வேறு விசயங்கள் இல்லாமல் போய்விட்டதுபோல் தெரிகிறது”,என்றார்.
மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியானில் பினாங்கு அரசு பாலேக் பூலாவ் கம்போங் கெந்திங்கில் “நன்யாங் பல்கலைக்கழகம் கட்ட அனுமதி வழங்கியதாக” முகம்மட் கூறினார் என வெளிவந்த செய்தி குறித்து அவர் கருத்துரைத்தார்.
அது மலாய்க்காரர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற நடைபெறும் “கமுக்கமான முயற்சி” என்று முகம்மட் கூறியிருந்தார்.
“அந்த அறிக்கையிலிருந்து இன உணர்வைத் தூண்டிவிடுவதும் பினாங்கு அரசுக்கெதிராக மலாய்க்காரர்களிடையே அச்ச உணர்வையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணுவதுமே முகம்மட்டின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
“உண்மை என்னவென்றால் நன்யாங் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் எதற்கும் பினாங்கு அரசாங்கம் அங்கீகாரம் கொடுக்கவில்லை. எனவே, முகம்மட்டின் கூற்று பொய்யானது, அடிப்படையற்றது”, என்று ஜைரில் கூறினார்.
‘மலாய்க்காரர்களை ஏமாற்றியது அம்னோ’
அம்னோ தலைவர்களே மலாய்க்காரர்களை ஏமாற்றினார்கள் பக்காத்தான் அரசு அல்ல என்றவர் சொன்னார்.
பாலேக் பூலாவ், கம்போங் தெராங்கில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிட்டார். அங்கு அம்னோ தலைவர்கள் இருவர்- மூசா ஷேக் பாட்சிரும் ஒமார் பவுட்ஜாரும்- 10 ஏக்கர் நிலத்தை 31 மலாய்க்காரர்களிடமிருந்து பெற்றனர்.
“அவர்கள் அந்த நிலத்தை ரிம8.6 மில்லியனுக்கு வாங்கி தனியார் மேம்பாட்டாளர் ஒருவரிடம் ரிம13.5 மில்லியனுக்கு விற்றனர்
“அதாவது மலாய்க்காரர்களைப் பயன்படுத்தி அவ்விருவரும் ரிம5 மில்லியன் ஆதாயம் அடைந்தனர்”, என்றாரவர்.
“அப்படியானால், மலாய் நிலத்தை விற்று சுய ஆதாயம் பெற்றவர்கள் யார்?”, என்று ஜைரில் வினவினார்.
அவ்விவகாரம் கடந்த ஆண்டு அம்பலப்படுத்தப்பட்டதும் மாநில அரசு தங்கள் நிறுவனத்தைக் “கருப்புப்பட்டியலில் சேர்த்துவிட்டது” அதனால்தான் அந்த நிலத்தை விற்க வேண்டியதாயிற்று என மூசாவும் ஒமாரும் கூறிக்கொண்டனர்.