பாரிசான் நேசனல் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு இப்போது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
பிஎன் தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சரியான நேரத்தில் அதனை வெளியிடுவார் என பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறினார்.
வெற்று வாக்குறுதிகளை வழங்கும் எதிர்க்கட்சிகளைப் போல் அல்லாமல் அந்தக் கொள்கை அறிக்கையில் கொடுக்கப்படும் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.
பிஎன் மக்களைச் சார்ந்த, மக்களுக்கான, மக்களைக் கொண்ட கட்சி என்ற முறையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.”
“மக்கள் விரும்புவது அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வழிகள் எங்களிடம் உள்ளதால் அந்த கொள்கை அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள் பூர்த்தி செய்யப்படும்.”
தெங்கு அட்னான் நேற்று புத்ராஜெயாவில் ஒரே மலேசியா மக்கள் உதவிக்கான (BR1M) பற்றுச் சீட்டுக்களை வழங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
திங்கட்கிழமையன்று வெளியிடப்படவிருக்கு பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்த கொள்கை அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதி அல்ல என அது ஒப்புக் கொண்டுள்ள வேளையில் அது ஏன் அதனை வெளியிடுகிறது என்பது தமக்குப் புரியவில்லை என்றார் அவர்.
எதிர்த்தரப்பின் பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை என்பது பூர்த்தி செய்யப்பட வேண்டிய வாக்குறுதிகள் அல்ல என மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வழி நடத்தும் சிலாங்கூர் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்னாமா