மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பின் தேர்தல் நேர்மை வாக்குறுதியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பின்பற்றித் தாமும் கையெழுத்திடப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறியிருக்கிறார்.
“நேரம் வரும் போது நான் அதில் கையெழுத்திட்டு நான் ஊழல், குற்றச் செயல்கள் ஆகியவற்றில் சம்பந்தப்படவில்லை என்பதை உறுதி செய்வேன்,” என அவர் ஈப்போவில் கேமிரன் மலை துரித பஸ் சேவையைத் தொடக்கி வைத்து சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
13வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் அந்த நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திடுவர் என அவர் நம்புகிறார்.
நஜிப் கடந்த புதன் கிழமை அந்த வாக்குறுதியில் கையெழுத்திட்டார். ஊழலை குறிப்பாக பொதுத் தேர்தலின் போது வலிமையுடன் எதிர்த்துப் போராடப் போவதாக அப்போது அவர் உறுதி கூறினார்.
மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பின் தேர்தல் நேர்மை வாக்குறுதி ஒரு சமூக ஒப்பந்தமாகும். நேர்மை, நல்ல ஆளுமை, பொறுப்புணர்வு, சட்ட ஆட்சியை நிலை நிறுத்துவது ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென அந்த வாக்குறுதி வலியுறுத்துகின்றது.
அந்த வாக்குறுதியில் கையெழுத்திடும் வேட்பாளர்கள் 1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் வழுவாது பின்பற்றுவதோடு தங்கள் நடவடிக்கைகள் தனிப்பட்ட நம்மைக்காக அல்லாமல் பொது மக்களுடைய நன்மைக்காக இருப்பதையும் உறுதி செய்யவும் வேண்டும்.