‘அல்லாஹ்’ விவகாரம் பொதுத் தேர்தலுக்குப் பின்பு வரை இழுக்கப்படலாம்

herald‘அல்லாஹ்’ பிரச்னை மீது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சிவில் நீதிமன்றங்களில் இறுதித் தீர்வு காணப்படும் என யாரும் எதிர்பார்த்தால் அவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள்.

கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரால்ட் வழக்கில் அரசாங்கமும் உள்துறை அமைச்சும் செய்து கொண்ட முறையீடு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிர்வாகத்துக்கு வியாழக்கிழமை வருகிறது.

அல்லாஹ் என்ற சொல் மீது உள்துறை அமைச்சு விதித்துள்ள தடை சட்ட விரோதமானது என 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி நீதிபதி லாவ் பீ லான் தீர்ப்பளித்தார்.

உள்துறை அமைச்சு அந்தத் தீர்ப்புக்கு எதிராக விண்ணப்பித்துக் கொண்டதைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பு அமலாக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த முறையீடு விரிவான தாக்கங்களையும் விளைவுகளையும் கொண்டிருப்பதால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்த முறையீடு விசாரிக்கப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மேலும் முறையீட்டு நீதிமன்றத்தில் அந்த விவகாரம் செவிமடுக்கப்பட்டாலும் இந்த நாட்டில் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தையே இறுதி முடிவு சார்ந்துள்ளது.

அந்த வழக்கு மீது உண்மையில் கவலை இருந்தாலும் உள்துறை அமைச்சும் அரசாங்கமும் அதனை மேலும் காலம் தாழ்த்துவதற்கு முயலும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முறையீட்டை நீதித் துறை மறு ஆய்வு செய்வது, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வரை தள்ளிப் போடப்படலாம் என வழக்குரைஞர்கள் வட்டாரங்கள் கருதுகின்றன.

ஹெரால்ட், கத்தோலிக்க தேவாலயம் ஆகியவற்றுக்கு எதிராக மேல் நீதிமன்றங்கள் முடிவு செய்யுமானால் அது வாக்காளர்களிடமிருந்து குறிப்பாக சபா, சரவாக் வாக்காளர்களிடமிருந்து கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும் எனக் கருதப்படுகின்றது.

அதே வேளையில் ஹெரால்ட்டுக்கு சாதகமான தீர்ப்பு முஸ்லிம்களுக்கு ஏமாற்றத்தை அளித்து விடக் கூடும்.

அந்த முறையீட்டை விசாரிப்பதில் ஏற்படும் தாமதம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஏனெனில் விரைவாக முடிவு எடுக்கப்பட்டு கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்வது ஒர் ஆண்டுக்குள் அல்லது சில மாதங்களுக்குள் முடிந்து விடும். பேராக் அரசமைப்பு நெருக்கடி வழக்கில் முறையீடுகளுக்கு வெகு விரைவாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

TAGS: