பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், தாமும் தற்காப்பு அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி ஹனட்ஸ்லாவும் பேராக் மந்திரி புசார் ஆவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறுவது “கிறுக்குத்தனமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
புத்ரா ஜெயாவிலிருந்து ஈப்போவுக்குச் செல்வது பதவி இறக்கமாகும் என்றார் நஸ்ரி
நஸ்ரி, அஹமட் ஜாஹிட், அஹமட் ஹுஸ்னி ஆகிய மூவருமே பேராக் எம்பிகள் ஆவர்.
“நாடாளுமன்றத் தொகுதியில்தான் போட்டியிடுவோம். பிரதமர் எங்களை அமைச்சர்களாகவே நியமனம் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.
“எங்கள் பதவி மந்திரி புசாரைவிட மேலானது. நாங்கள் பதவி இறங்கி மந்திரி புசார் ஆக நினைத்தால் அது கிறுக்குத்தனமாகும். எல்லாரும் பதவி உயர்வதைத்தான் விரும்புவார்கள்.
“பதவி இறக்கப்படுவதை விரும்புவோரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை”, என்று நஸ்ரி கூறியதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது.
ஒரு வேளை நடப்பு மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர் மீண்டும் மந்திரி புசார் ஆவதை விரும்பவில்லை என்றால் மூவரில் ஒருவர் பதவி இறக்கப்படலாம் என்று நஸ்ரி வேடிக்கையாகக் கூறினார்.
ஜம்ரி மாற்றப்படலாம் என்று ஈப்போவில் வதந்தி உலவுகிறது.
2009-இல் பேராக்கில் பக்காத்தானிடமிருந்து ஆட்சி பிஎன் கைக்கு மாறியபோது மூத்த அம்னோ தலைவர்கள் பலர் இருந்தும்கூட ஜம்ரி மந்திரி புசாராக நியமனம் செய்யப்பட்டார்.