தமிழர் பணிப் படை 223 பேரணி நேற்று கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் மாலை மணி 6.30க்கு மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கியது. 1,000 க்கு மேற்பட்டோர் அப்பேரணியில் பங்கேற்றனர்.
சங்கே முழங்கு என்ற பாடலுக்கான நடனத்துடன் பேரணி தொடங்கியது. மேடையில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராமசாமி, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன், டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், அம்பிகா சீனிவாசன், வேதமூர்த்தி, நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் ரவி, பாஸ் இந்திய பேரவை தேசியத் தலைவர் பாலா, தமிழ் நாடு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியரோடு இன்னும் பலர் இருந்தனர்.
இப்பேரணியில், பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி. இராமசாமி தமிழர் தலைவர் என்று பிரகடனம் செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக இராமசாமியை தமிழர் தலைவராக அங்கீகரிக்க ஒப்புக்கொள்வதாக பேரணியில் குழுமியிருந்தவர்கள் ஒப்புதல் அளித்தனர்.
இப்பிரகடனத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கையெழுத்திட்டார்.
பேரணியில் கலந்து கொண்டவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் உரையாற்றிய “தமிழர் தலைவர்” இராமசாமி “நமக்கு வேண்டியது உரிமை; பொங்கல் அல்ல” என்று பிரகடனம் செய்தார்.
ஓர் இலட்சம் தமிழர்களை கொன்ற ராஜபக்சே மலேசியாவுக்கு வருகை அளிப்பதை எதிர்ப்பதற்காக தோன்றிய படை பின்னர் தமிழர் பணிப் படை என மாற்றம் கண்டதாக இராமசாமி கூறினார்.
தமிழ் நாடு, மதுரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டதை விவரித்த அவர், தமிழ் நாட்டில் தமிழர் தலைமைத்துவம் இல்லை; தமிழ் இல்லை; அது ஒரு போலி நாடு என்றார்.
தமிழ் இனத்தை ஒன்றுபடுத்துவது சாதாரண விசயமல்ல. ஏன்? துரோகம் தமிழனின் இரத்தத்தில் ஊறியுள்ளது, எடுத்துக்காட்டு, கருணாவும் கருணாநிதியும் என்றாரவர்.
“இந்தியர்” என்ற சொல் அகற்றப்பட வேண்டும். நமக்கு வேண்டியது தமிழ் ஈழம், தமிழ் தேசியம். திராவிடம் ஒர் அர்த்தமற்ற சொல். தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் மேம்பாட்டிற்கு முறையான கல்வி மற்றும் பொருளாதார திட்டங்கள் வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்நாட்டில் தமிழர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. கெடா மாநிலத்தை இந்து சமயம் சார்ந்த மலாய்க்காரர்கள் 66 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர் என்று கூறிய இராமசாமி, “நமது சரித்திரம் நமது அடையாளம். அதற்காக நாம் போராட வேண்டும்”, என்றார்.
“சரித்திரம் இல்லாத இனம் தேசிய இனமாக முடியாது”. நமது இலக்குகளை அடைய தமிழர் பணிப் படை செயல்படும் என்று அவர் உறுதியளித்தார்.