13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சீன வர்த்தகர்களுக்கு ‘மகிழ்ச்சி இல்லை’

Accimமலேசியப் பொருளாதாரத்தின் நடப்பு நிலைமை குறித்து மலேசிய கூட்டு சீன வர்த்தக, தொழிலியல் சங்கத்தின் உறுப்பினர்களில் 75 விழுக்காட்டினர் மகிழ்ச்சி அடையவில்லை.

இவ்வாண்டு ஜனவரி மாதமும் பிப்ரவரி மாதமும் அது நடத்திய ஒர் ஆய்வின் வழி அது தெரிய வந்துள்ளது.

2012 பிற்பகுதியில் மலேசியப் பொருளாதார நிலவரம் பற்றி 408 உறுப்பினர்களிடம் வினவப்பட்டதாக அது கூறியது.

கூட்டரசு அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள குறைந்த பட்ச ஊதியம் பற்றியும் அதிருப்தி அதிகரித்துள்ளது. பேட்டி காணப்பட்டவர்களில் 64.5 விழுக்காட்டினர் அது குறித்து மகிழ்ச்சி அடையவில்லை. அந்த விகிதம் 2012 பிற்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13.5 விழுக்காடு அதிகமாகும். அந்தக் கொள்கை தங்கள் வர்த்தகம் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தும் என்றும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் அல்லது 65  விழுக்காட்டினர் நம்பவில்லை.

என்றாலும் 2013, 2014, 2015 ஆகியவற்றில் மலேசியாவின் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என சீன வர்த்தக சமூகம் நம்புவதாகத் தெரிகின்றது.

பெரிய அரசாங்கத் திட்டங்கள் ‘பெரிய ஆட்களுக்கு’ நேரடியாக செல்வது பற்றியும் சிறிய தொழில்கள் புறக்கணிக்கப்படுவது பற்றியும் வர்த்தக சமூகம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் மலேசிய கூட்டு சீன வர்த்தக, தொழிலியல் சங்கத்தின் துணைத் தலைவர் பெக் பூக் சூன் கூறினார்.

சந்தேகங்கள்

2020 வாக்கில் நாட்டை உயர்ந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றும் அரசாங்க இலட்சியத்தை அடைய முடியுமா என்றும் பேட்டி காணப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“நீங்கள் வர்த்தகக் கண்ணோட்டத்தில் அதனை ஆய்வு செய்தால் நிச்சயம் உங்களுக்குச் சந்தேகம் எழும்,” என்றார் அவர்.

இதனிடையே ‘நடுத்தர வருமான வலையிலிருந்து மலேசியர்களை விடுவிக்க அரசாங்கம் தொடங்கியுள்ள முயற்சிகள் பலனளித்துள்ளதாகவும் 21.6 விழுக்காட்டினர் எண்ணுகின்றனர்.

பல்வேறு அரசாங்கத் திட்டங்கள் மூலம் சிறிய நடுத்தர தொழில்களும் தொழில் முனைவர்களும் பயனடையவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியது.

அரசியல், பொதுத் தேர்தல் பற்றிய கேள்விகளும் பேட்டியில் இடம் பெற்றிருந்ததா என்ற கேள்விக்குப் பதில் ளித்த பெக், அவை மிகவும் உணர்ச்சிகரமான விஷயங்கள் என்றார்.

அரசாங்க மாற்றம் குறித்து சீன வர்த்தக சமூகம் அச்சம் கொண்டுள்ளதாக என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. தேர்தலை அந்த சமூகம் அமைதியாக எடுத்துக் கொள்ளும் என்று மட்டும் சொன்னார்.

குறைந்த பட்ச சம்பளம் படிப்படியாக அமலாக்கப்பட வேண்டும் என மலேசிய கூட்டு சீன வர்த்தக, தொழிலியல் சங்கம் 2007 முதல் வலியுறுத்தி வந்ததை ஏற்கதாதற்காக அவர் அரசாங்கத்தைக் குறை கூறினார்.

ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான தகராறுகள் வருத்தம் அளிக்கின்றன என்றார் அவர்.

நாடு 5.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும் நடப்பு பொருளாதார சூழ்நிலை காரணமாக எல்லோரும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கவில்லை என்றும் பெக் சொன்னார்.

 

TAGS: