பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை அனைவருக்கும் உரியது, இந்தியர்களுக்கு மட்டுமல்ல

manifestoபக்காத்தான் ராக்யாட் வெளிட்ட தேர்தல் கொள்கை அறிக்கையில் மலேசிய இந்தியர்களைப் பற்றிக் சிறப்பாகக் குறிப்பிடப்படவில்லை எனக் குறைகூறப்பட்ட போதிலும் பிகே ஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அது பற்றி வருத்தம் தெரிவிக்கத் தயாராக இல்லை.

அதற்குப் பதில் அவர், அந்த தேர்தல் கொள்கை அறிக்கை இன எல்லைகளக் கடந்து செல்கிறது என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்த கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

“நாங்கள் பல ஆட்சேபங்களை பெற்றுள்ளோம். அது சரியே…. அதற்காக நான் வருத்தம் தெரிவிக்க விரும்பவில்லை. அந்த கொள்கை அறிக்கையைத் தயாரித்த குழுவில் முக்கிய உறுப்பினர் என்ற முறையில் நான் என் நிலையில் உறுதியாக இருக்கிறேன்,” என்றார் அவர்.

இன எல்லைகளைக் கடந்து நாட்டை முழுமையாக சீர்திருத்தவும் மாற்றவும் பக்காத்தான் கூட்டணி உறுதிபூண்டுள்ளதால் அது இன எல்லைகளை ஒட்டி தேர்தல் கொள்கை அறிக்கைகளை எழுதக் கூடாது.”manifesto1

“பல்வேறு பிரிவுகளுக்கு வெவ்வேறு வகையான தீர்வுகளை வாக்குறுதியாக வழங்குவது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் சமுதாயம் ஒரே பிரச்னைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது,” ராபிஸி சொன்னார்.

“மலாய்க்காரர்களும் சீனர்களும் ஏழையாக இருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணம் தான் இந்தியர்கள் ஏழையாக இருப்பதற்கும்,” என்றார் அவர்.

“என் கட்சியின் எதிர்காலம்” என்னும் தலைப்பில் நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் ராபிஸி பேசினார். அந்த விவாதத்தில் மசீச உதவித் தலைவர் கான் பிங் சியூ-வும் உரையாற்றினார்.

கொள்கைகள் இன எல்லைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

Rafizi2என்றாலும் ஒர் இனத்தை மட்டும் சார்ந்துள்ள மசீச இன்னும் பொருத்தமானது என அவர் வலியுறுத்தினார். புதிதாக அந்தக் கட்சியில் 80,000 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட கான், 900 பேர் மட்டுமே விலகி உள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் டாக்டர் மகாதீர் முகமட் காலத்துடன் ஒப்பிடுகையில் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தில் தேசியக் கொள்கைகளை வகுப்பதில் மசீச பங்காற்றுவதாகவும் அவர் சொன்னார்.

என்றாலும் தேசிய விவகாரங்களில் தமது கட்சி இன்னும் உரத்த குரலில் பேச வேண்டும் என செனட்டரும் இளைஞர், விளையாட்டு துணை அமைச்சருமான கான் கூறினார். இல்லை என்றால் அது ஒரு சமூக நலனுக்கு மட்டும் பாடுபடும் கட்சியாக மட்டுமே பார்க்கப்படும் என்றார் அவர்.

“ஒரு சமூகப் பிரச்னைகளை பேசும் கட்சியாக மட்டும் மசீச-வைப் பார்க்கக் கூடாது. அது தவறு. சமூகப் பிரச்னைகள் தேசியப் பிரச்னைகளில் ஒரு பகுதியாகும்.”

“ஆகவே நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும். சமூகப் பிரச்னைகள்- விரிவான தேசியக் கண்ணோட்டத்தில் கவனிக்கப்பட வேண்டும்- நாம் என்ன செய்கிறோம் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும்,” என்றார் கான்.